மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் பஸில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் முறைமைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலை உடனடியாக எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கான தேர்தல்கள் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்துக்கு சில வேளையில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மூன்றில் இரண்ட பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல. இது தொடர்பில் தனிநபர் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன்.
இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி என அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பதால் முழு நாடாளுமன்ற ஆதரவோடு சட்டம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் எம். பியின் கருத்தை சட்ட மா அதிபரின் பிரதிநிதி, அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.
Leave a comment