பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை தவிசாளரால் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் இன்று முன்வைக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்டை ஆகியவற்றின் உறுப்பினர் தலா ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆறு பேரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
இதன்படி, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சமநிலை காணப்பட்டது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றச் சட்டத்துக்கு அமைய தவிசாளர் வாக்கும் கணக்கெடுக்கப்பட்டது. தவிசாளர் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார்.
வாக்கெடுப்பின் பின்னர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை முன்னெடுத்த நிலையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Leave a comment