மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் தனது போர் விமானங்களையும் இராணுவப் படைகளையும் சவூதிக்கு அனுப்பியுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமானப்படைத் தளத்திற்கு பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் துணை விமானங்கள் வந்தடைந்துள்ளதை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சவூதியின் ஜுபைல் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சவூதி நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததுடன், முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா பதிலடி கொடுக்கக்கூடும் என்றும், அது இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கலாம் என்றும் பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது. எனவே, சவூதிக்கு எதிரான மேலதிகத் தாக்குதல்களைத் தடுக்கவும், அந்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த இராணுவப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
“இந்த விமானங்கள் யாரையும் தாக்குவதற்காக அங்கு செல்லவில்லை, மாறாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம்” என்று பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே 2025 செப்டம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல், இரு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நீண்டகாலமாக சவூதிக்கு இராணுவப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருவதுடன், பொருளாதார நெருக்கடி காலங்களில் சவூதி அரேபியா பாகிஸ்தானுக்குப் பாரிய நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சவூதி நிதி அமைச்சர் முகமது அல்-ஜதான் அண்மையில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து பொருளாதார ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தார். இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் இந்த இராணுவ நிலைநிறுத்தம் பிராந்திய பாதுகாப்பில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.