பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து. பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஏதும் இதுவரை பதிவாகவில்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடி செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தற்போது ஊடகங்களில் வெளியான இச் செய்தியானது தமக்குத் தெரிந்தவரை உண்மைக்குப் புறம்பானவை என்றும் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் வங்கிக் கணக்கு தொடர்பான சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும், அத்துடன் பிரதமருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment