அரசிடம் சிறந்த திட்டம் இல்லை – எதிர்க்கட்சி சாடல்!
தற்போதைய அரசிடம் நாட்டை நிர்வகிக்கக்கூடிய சிறந்த திட்டமிடல் இல்லை. இதனால் நாடு பொருளாதாரத்தில் படுபாதாள நிலைக்கு சென்றுவிட்டது. நாட்டு மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது. இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மேற்படி தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசாங்கம் நாட்டின் மக்களை அடக்க நாடாளுமன்றில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக சரிந்துள்ளன. பாடசாலைகளைத் திறக்க திட்டங்களும் இதுவரை இல்லை.12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உலகின் ஏனைய நாடுகள் தடுப்பூசி போடும்போது, அதை வழங்க எம் நாட்டில் எந்த திட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இணைய வழி கற்றலில் 40 வீத மாணவர்களே பயனடைகின்றனர், 60 வீதமான மாணவர்களுக்கு முறையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கல்வியை மேம்படுத்துவதற்காக இந்த அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?
மேலும் பெரும்போக பருவத்துக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளன, நெல் மற்றும் சோளக பயிர்ச்செய்கைக்கு நிலத்தை தயார்படுத்த வேண்டும். களைகளை கட்டுப்படுத்துவது அதன் முதல் பணி. களைகளை கட்டுப்படுத்தாமல் இந்த கனமழையால் விவசாயத்தை தொடர்வதில் சிக்கல் உள்ளது.
விவசாய சேவை மையங்கள் மூலம் பூஞ்சை கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லிகள் விநியோகிக்கப்படுகின்றன என திணைக்களம் கூறுகிறது. ஆனால் 50 லீட்டர் மற்றும் 400 கிரேம் பீடை நாசினிகளை பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டும். சிலர் வெறும் கைகளுடன் வீடுகளுக்கு திரும்புகின்றனர். இதற்கு அரசிடம் சரியான திட்டம் இல்லை.
சீனி இறக்குமதிக்கு ஏகபோக உரிமையை ஒரு நிறுவனங்களுக்கு கொடுத்ததன் விளைவுகளை ஒரு நாடாக நாம் அனுபவித்து வருவதை நாங்கள் பார்த்தோம். இத்தகைய முடிவால் உரங்களுக்கு மிகப்பெரிய விலை உயர்வும் அதனால் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.
இந்த நாடு உணவுப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் குறியீட்டில் 66 ஆவது இடத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடைகிறது. இவ்வாறு சென்றால் கொரோனாத் தொற்றைவிட பட்டினி அதிகரிக்கும்.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முதுகெலும்பு இல்லை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். அதனால் தான் இந்த நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அரசாங்கம் கூறுவது ஒன்று. செயற்படுவது பிரிதொன்றாகவுள்ளது. எனவே சிறந்த திட்டத்தை செயற்படுத்தினாலே நாட்டை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment