douglas devananda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை!!

Share

பௌத்த மதத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கின்ற இனவாதிகள், பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற, சுகாதார அமைச்சு மற்றும் பௌத்த சாசன, கலாசார மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சு தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையற்றிய கடற்றொழில் அமைச்சர்,

ஒரு காலத்தில் தென்னிலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் கையாண்டனர். அதேபோல் தொடர்ச்சியான இனக் கலவரங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஒரு காலத்தில் நாம் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எமது அந்த போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் ஏற்பட்ட குணாம்ச ரீதியான மாற்றங்கள் காரணமாக, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு அவை முன்வந்திருந்தன.

எனினும் அதற்கு இடம்கொடுக்காமல் – உரிமைப் போராட்டத்தின் விளைவாக கிடைத்ததை மழுங்கடிக்கக்கூடிய வகையில், ஓரு வன்முறை போராட்டம் தொடர்ந்து, யுத்தமாக மாற்றமடைந்து, அந்த யுத்தம் தமிழ் மக்கள் என்ற அடிப்படையிலும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் பலரைக் காவு கொண்டது.

இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு அந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்கைளுக்கு ஊடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

எனினும் துரதிஸ்டவசமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்றவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல், தங்களுடைய சுயலாப அரசியலுக்காக அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த விடயத்தில் நான் தமிழ் தரப்பினரை மட்டும் சொல்லவில்லை, சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றனர். ஆக இரண்டு தரப்பிலும் இருக்கின்ற இனவாதிகள் இநதப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகாக வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன்.

அடுத்ததாக, யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் நினைவு கூரமுடியும். அதில் பிரச்சினையே இல்லை. எனினும் அவ்வாறான நினைவுகூரல்களை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பயன்படுத்துவதுதான் பிரச்சினையான விடயமாக இருக்கின்றது என்பதை சம்மந்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜை என்ற வகையிலும் நான் பலரை இழந்திருக்கின்றேன். எனவே, உறவுகளை இழந்தவர்களின் வலி எந்தளவிற்கு கொடுமையானது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் இந்தப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளை மூலமே தீர்த்துக் கொள்வற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றேன்.

என்னைக்கூட கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 15 வருடங்களுக்கு முன்னர், இன்றைய நாளில்கூட என்னைக் கொலை செய்யும் முயற்சியில் ஒரு தற்கொலை குண்டுதாரி உயிரிழந்திருந்தார். அவ்வாறு உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன் – அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், இன்றைய விவாதத்துடன் சம்மந்தப்பட்ட அமைச்சு தொடர்பான எனது கருத்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். குறிப்பாக திருகோணமலை திருக்கோணேஸ்வரம், வவுனியா வெடுக்கநாரி விவகாரம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் போன்ற சில விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன.

இது தொடர்பாக துறைசார் அமைச்சர் விதுர விக்கிரநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். நீண்டகால நண்பரான கௌரவ அமைச்சர் அவர்கள், நியாயமாகவும் யாதார்த்தமாகவும் பிரச்சினைகளை கையாண்டு வருகின்றார். நாம் இருவரும் திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்து கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம். அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று வெடுக்குநாரி மற்றும் குருந்தூர் விவகாரங்கள் நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்டிருப்பதனால், குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக சென்று ஆராய்வதுடன் நீதிமன்றத்தின் ஊடக அந்த விடயங்களை தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன. இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்து சமயத்தவர்களோ தமிழ் மக்களோ என்றைக்குமே பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களும் பௌத்த மதத்தினை பின்பற்றி இந்த நாட்டிலே வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால், பௌத்தத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதையும் அல்லது பலாத்கார குடியேற்றங்களையுமே தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதனை கௌரவ துறைசார் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகின்றேன்.

அதேபோன்று எமது ஜனாதிபதி அவர்களும் குறித்த விடயங்களில் நல்ல புரிதலுடன் செயற்பட்டு வருவதுடன், பதவியேற்று குறுகிய காலத்திலேயே பல்வேறு விடயங்களை தீர்ப்பது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். எனவே அவருடைய முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...