புதிதாகப் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தின் போது ஆராயப்படுமென தெரியவந்துள்ளது.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா? இல்லையா? என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
மேலும் நாளைய அமைச்சரவைக் கூட்டம் தீர்க்கமானதாக இருக்கும் என்றும், இக்கூட்டத்தில் நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதித்து தீா்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு அமைச்சரவை கூட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்காரவும் பந்துல குணவர்த்தனவும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் என அமைச்சர் வாசுதேவநாணயக்கார எச்சரித்துள்ளார்.
எனினும் மாற்று வழிமுறைகள் உள்ளனவா என பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியவேளை அவர் யோசனைகள் எவற்றiயும் முன்வைக்கதவறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
#SrilankaNews
Leave a comment