” மலையகத்திலுள்ள அமைச்சர்களுக்கும் முதுகெலும்புள்ளது என்பதை, பதவி துறந்து நாம் காண்பித்துவிட்டோம். சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் கொள்கை அரசியலே முக்கியம். அந்த வழியில்தான் பயணிக்க வேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை மற்றும் அதற்கான தீர்வு பொறிமுறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (07) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.
அத்துடன், மக்களின் தீர்ப்பே காங்கிரஸின் தீர்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து தீர்வை காண வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதில் பயன் இல்லை எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
” நாம் மக்களுக்காக அபிவிருத்திகளை செய்துள்ளோம். உறுதிமொழிகளை வழங்கியுள்ளோம். ஆனால் சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலை தாண்டி கொள்கை அரசியலுக்கு மாறியாக வேண்டிய தருணமிது.
” வன்முறையின்றி ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை இ.தொ.கா. ஆதரிக்கும். மக்களுக்கு தமது உள்ளக்குமுறல்களை வெளியிட சுதந்திரம் உள்ளது. எனினும், தலவாக்கலையில் இன்று நடைபெற்ற கூட்டம், கட்சி கூட்டமாக நடத்தப்பட்டுள்ளது. கவலையை வெளியிட மக்களை வைத்து, சஜித்துக்கு பிரச்சாரம் செய்துள்ளனர். இது தவறாகும். ” – என்று கடும் விசனத்தை வெளியிட்டார் ஜீவன் தொண்டமான்.
#SriLankaNews
Leave a comment