srikantha
இலங்கைஅரசியல்

வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமல் வெல்வதற்கு முன்வர வேண்டும் – வடக்கு ஆளுநரிடம் வேண்டுகோள்

Share

வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு முன்வர வேண்டும் – என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து எழுப்பியிருந்த எதிர்ப்புக் குரல்களின் ஓர் அங்கமாகவே மாதகலில் காட்டப்பட்ட எதிர்ப்பும் அமைந்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தி 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும், யுத்தம் நிகழ்ந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பின் பிரசன்னம் என்பது யுத்த காலத்தைப் போலவே தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது. பல்வேறு படைத்தளங்களும் மேலும் விஸ்த்தரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களும் மேலும் விஸ்த்தரிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து இலங்கையில் கள்ளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதை தடுப்பது என்ற பெயரில் 1957ல் காரைநகரில் நிறுவப்பட்ட கடற்படைத்தளம் தொடர்ந்து விஸ்தரிக்கப்பட்டு ஓர் பாரிய தளமாக நிலைத்து நிற்கையிலும் கூட, இந்த விஸத்;தரிப்புக்கள் தொடர்கின்றன.

இன்னுமோர் பாரிய கடற்படைத் தளம் காங்கேசன்துறையிலும் இருக்கின்றது. ஆயினும், மாதகலில் உள்ள கடற்படை முகாமின் தேவைக்காக தனியார் காணி ஓன்றினை சுவீகரிக்கும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இப்போது வட மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை, நீடித்துக் கொண்டிருக்கும் காணி அபகரிப்புப் பிரச்சினையை மேலும் சிக்கல் அடைய வைத்து பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம்.

தம்மை பாதிக்கும் எந்தவொரு அரசாங்க நடவடிக்கைக்கும் எதிராக சமூகமட்டத்தில் எவரும் சட்டத்திற்கு அமைவாக எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அரசியல் சாசனத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை நீதிமன்றங்களினாலும் பாதுகாக்கப்படுகின்றது.

மாதகல் உட்பட வடக்கில் தொடரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த உரிமையின்
அடிப்படையிலேயே எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. வடக்கை பொறுத்த மட்டில் இது ஒன்றும் புதிய விடயமல்ல, புதிய ஆளுநர் வடக்கிற்கு வருவதற்கு முன்பிருந்தே நிலை கொண்டு நீடித்து நிற்கும் விவகாரம்.

இந்தப் பிரச்சினையில் அதிகார பூர்வமாக தலையிடுவதற்கு சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு இடமில்லை. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களோடு வட மாகாண சபை இயங்க முடியாமல் ஸ்தம்பிக்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் சகல அதிகாரங்களையும் கையாளும் ஆளுநருக்கு காணி மற்றும் பொலீஸ் துறை தொடர்பான எந்த அதிகாரமும் கிடையாது.

அரசியல் சாசனத்தின் 13ம் திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலீஸ் துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் இன்னமும் பகிரப்பட்டிராத நிலையில், அந்த அதிகாரங்கள் எவையும் ஆளுநருக்கு கிடையாது. மாறாக, இந்த அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே உள்ளன. இதுதான் யதார்த்தம்.

நிலைமை இப்படி இருக்கையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஆளுநர் எச்சரிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

பதவி ஏற்ற கையோடு வடக்கில் வாள் வெட்டுக் குழுக்களை அடக்கப் போவதாக ஆளுநர் அறிவித்தபோது, அது நல்ல நிலைப்பாடாக இருந்தாலும், அது தொடர்பில் அவருக்கு அதிகாரம் இல்லை என்பதை அப்போது நாம் சுட்டிக்காட்ட விரும்பியிருக்கவில்லை.

ஏனெனில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் எதிர்மறையான கருத்தோடு அவரை வரவேற்பது அரசியல் நாகரீகம் அல்ல என்றே நாம் கருதினோம். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்வது போன்ற கனவுகள் கலைவது பொதுவாக சகலருக்கும் நன்மையானது.

காணி அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தமாக சட்டம் பாய வேண்டுமானால் கொழும்பிலிருந்து தான் அது ஏவப்பட வேண்டும். நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் அரசாங்கம், எவர் தூண்டினாலும் இன்றைய சூழ்நிலையில் அதனை தவிர்க்கவே விரும்பும் என்பது எமது கணிப்பு. மாறாக சட்ட நடவடிக்கைகள் தொடுக்கப்படுமானால், சிறு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலாக பாரிய போராட்டங்களுக்கே அவை அடி கோலும்.

ஆளுநர் ஜீவன் தியாகராசா சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கரிசணை காட்டும் அதே வேளையில் பொது மக்களுக்கு எதிராக பொல்லுகளோடும் மிரட்டல்களோடும் அன்றைய தினம் மாதகலில் அரங்கேற்றப்பட்ட சட்ட விரோத சம்பவங்கள் பற்றியும் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

ஆளுநர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பிறப்பால் தமிழர். தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர். உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு அவர் முன்வர வேண்டும் என்பதே எமது ஒரே ஓரு வேண்டுகோள் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...