சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை
ஆராய்ச்சிக் கப்பலின் சர்ச்சைக்குரிய விஜயத்தில் இலங்கை, சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற சீனக் கப்பல், இலங்கை கடற்படையின் கண்காணிப்பாளர்களுடன், நாளை முதல் இரண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் பங்காளிகளுடன் “கூட்டு ஆராய்ச்சியில்” ஈடுபட இலங்கை அனுமதி அளித்துள்ளது.
உள்ளூர் பங்குதாரராக, தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி முகமையின் (NARA) கடல்சார் விஞ்ஞானிகள் கப்பலில் இருப்பார்கள். எனினும் பங்கேற்கவிருந்த ருஹுணு பல்கலைக்கழகம் ஆய்வில் பங்கேற்காது.
அத்துடன், ஆராய்ச்சிக் கப்பலின், ஆய்வுகளும், மேல் மாகாணத்தின் நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை அதிகாரிகளுடன் சீன ஆய்வுக் கப்பல், நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் மேற்கு பிராந்திய கடற்பரப்பில் கடல் ஆராய்ச்சி ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.
கொழும்பிற்கும் பீய்ஜிங்கிற்கும் இடையிலான பரபரப்பான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.