கொழும்பில் எவ்வளவு தூரம் பொருட்கள் விலை குறைந்து கிடைக்கின்றதோ அதன் தாக்கம் உடனடியாகவே யாழ்ப்பாண மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் நாங்கள் விலையை குறைத்து வழங்குவோமென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார்
நேற்று யாழ் வணிகர் கழகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒரு மாதத்திற்கு முன்பு அத்தியாவசிய தேவைக்காக கொழும்புக்கு சென்று வருவதற்கான தேவைகளுக்கு தேவைப்பட டீசலை பெறுவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தோம். இது சம்பந்தமாக யாழ் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடியிருந்தோம்.
அதற்கமைவாக கடந்த சில வாரங்களாக யாழ் மாவட்ட செயலாளரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளரும் யாழ்ப்பாண பிரதேச செயலகமும் இணைந்து அத்தியாவசிய சேவையை மேற்கொள்வதற்காக டீசலை ஒதுக்கீடு செய்து தந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு எமது விசேடமான நன்றிகளினை தெரிவிக்கின்றோம்.
அதற்கு மேலதிகமாக காரைநகர் ஐஓசி நிரப்பபு நிலையம் மற்றும் இன்னொரு எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக டீசலை பெற்று வாரத்திற்கு இரண்டு முறையாவது கொழும்பு சென்று வருவதற்கான டீசலை பெற்று கொடுக்கின்றோம்.
ஒரு முறை கொழும்புக்கு சென்றுவர 220 லீட்டரில் இருந்து 240 லீட்டர் வரை டீசல் வழங்கப்படுகிறது. தற்போது தடை இல்லாமல் வாரத்துக்கு இரண்டு முறை அதனை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் முன்னர் ஒரு கிலோ பொருளை கொண்டு வருவதற்கு 16 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை வாகன கூலி இருந்தது. தற்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் எடுத்த முயற்சி காரணமாக ஒரு கிலோ பொருளை கொண்டு வருவதற்கு 19 ரூபாயில் இருந்து 12 ரூபா வரைக்கும் கூலி குறைந்துள்ளது.
கொழும்பு சென்று யாழ்ப்பாணம் திரும்பி வருவதற்கான மொத்த டீசல் செலவு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை காணப்படுகின்றது. தொடர்ச்சியாக டீசல் கிடைக்கும்பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளை தங்கு தடையின்றி பொருட்களை மக்களுக்கு கிடைப்பதற்கான ஒழுங்குகளை செய்யமுடியும். அதேபோல கொழும்பில் எவ்வளவு தூரம் பொருட்கள் விலை குறைந்து கிடைக்கின்றதோ அதன் தாக்கம் உடனடியாகவே யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவிக்கக்கூடிய வகையில் நாங்கள் விலையை குறைத்து வழங்குவோம்.
விலை சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படின் எம்மைத் தொடர்பு கொண்டால் கொழும்பின் தற்போதைய சரியான விலைகளை உங்களுக்கு தெரியப்படுத்துவோம் – என்றார்.
#SriLankaNews
Leave a comment