எரிவாயு சிலிண்டர்கள் மிக சொற்பமான அளவே தற்போது கிடைக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழேயே அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த புதிய நடைமுறை பற்றிய கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது. சில நடைமுறைச் சிக்கல்களை தவிர்த்து எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டியுள்ளது. இந்த முறை இன்று மாலை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இறுதி செய்யப்பட்டு இனிமேல் இந்த நடைமுறைக்கமையவே யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகம் இடம்பெறும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நேற்று மற்றும் இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் போது தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் இடம்பெற்று இருந்தமையை அறிய முடிந்தது. எரிவாயு விநியோகத்தில் சில முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் எங்களுக்கு முறையிட்டுள்ளனர்.
ஆகவே இவற்றை தவிர்க்கும் வகையில் பங்கீட்டு அட்டை நடைமுறையை உடனடியாக அமல்படுத்தி அந்தந்த பிரதேச முகவர்கள் ஊடாகவே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளோம்.பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாறாமலும் அதிக பணம் கொடுக்காமலும் முறையான நடைமுறைக்கமைய பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.
#SriLankaNews
Leave a comment