“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ‘கோ ஹோம் கோத்தா’ என இடித்துரைத்து வருகின்றனர். அந்த ‘கோ ஹோம் கோத்தா’ என்ற தனிநபருக்கு எதிரான கோஷத்தை ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மாற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் முயற்சித்துவருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்கு தமது சகாக்களை ஆளுங்கட்சியினர் இறக்கியிருந்தனர்.
மக்கள் போராட இடமளித்து, பிரச்சினையை இழுத்தடிப்பதும் அல்லது மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதற்குமே ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளித்துவிடக்கூடாது. இந்த அரசுக்கு எதிராக போராடி கிராம மக்கள் களைத்துவிட்டனர். எனவே, தற்போது மேல்மாகாணத்தில் தன்னெழுச்சி போராட்டங்கள் வலுக்க வேண்டும். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மக்கள் போராட்டங்களை கைவிடக்கூடாது.
அரசியல் வாதிகள் ஏன் வீதிக்கு வரவில்லை என கேட்கின்றனர், நாங்கள் வந்தால் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிடும். எனவே, ஒரு நாளில் ஓரிரு மணிநேரம் போராடி தீர்வை அடையமுடியாது. கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை அவரின் வீட்டுக்கு முன்னால் அமர்ந்து போராட வேண்டும். 10 பேர் போராட்டத்தை ஆரம்பித்தால் ஒரிரு நாட்களில் அது லட்சமாக மாறும். “ – என்றார்.
#SriLankaNews