சிறார்களை நிர்வாணமாக்கி, மிளகாய்த்தூள் பூசிய தந்தை கைது!

ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு சிறார்களை துன்புறுத்தல் குற்றச்சாட்டின்கீழ் அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுடைய சிறுவனும், 7 வயதுடைய சிறுமியுமே கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அச்சம்பவம் இடம்பெறும்போது தாயும் அருகில் இருந்துள்ளார்.

சிறார்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Hatton 03

அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகள் அழுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் அயலவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பலமுறை தாக்கியதாகவும், தனது மனைவியைத் தாக்கியதில் அவரின் கையை முறிந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

#SrilankaNews

Exit mobile version