அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.
பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,
இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment