அரியாலை கொலைச் சம்பவம்! – மேலும் ஒருவர் கைது
அரியாலை – பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பஸ்தர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுடன் தொடர்பை பேணியவர் என சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனது, கணவன் தினமும் போதையில் வந்து தன்னை தாக்குகின்றார் எனவும், இரவு போதையில் வந்து தாக்கியபோது தான் ஆத்திரத்தில் கையில் அகப்பட்ட திருவலையால் திருப்பி தாக்கினேன் எனவும் அதனால் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் மனைவியுடன் அவருக்கு உள்ள தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைதான் குடும்பத் தலைவரை கொலை செய்ய காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவரும் இணைந்தே கணவரை கொலை செய்துள்ளனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட துரைராசா செல்வக்குமார் (வயது-–32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண்ணையும், அவருடன் தொடர்பை வைத்திருந்தார் என சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய ஆணையும், யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment