” புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ,கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது.
இதன்போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டார்.
” சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டோம். எனினும், ஜனாதிபதி பதவிக்காக பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்மூலம் சர்வக்கட்சி அரசமையுமா என்ற சந்தேகம் எழுகின்றது. எனினும், அந்த முயற்சியை நாம் கைவிடவில்லை. எம்மால் முடிந்த அளவில் தலையீடுகளை செய்வோம்.
அந்த முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், ஜனாதிபதி பதவிக்கு எமது கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார். நாட்டு மக்களால் கோரப்படும் தலைமைத்துவம் அவர்தான். எம்மால் நாட்டை மீட்க முடியும். அதற்கு அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் சர்வக்கட்சி அரசு அமைக்கப்படும்.” என்றும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, டளஸ் அழகப்பெரும ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதற்கான வேட்புமனு எதிர்வரும் 19 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும்.
சரத் பொன்சேகா, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் களமிறக்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
Leave a comment