விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாட்டிற்கும் நாட்டில் ஒருபோதும் இடமளிக்க முடியாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப்பாட்டை விளக்கிய அமைச்சர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஊக்குவிக்கும் அல்லது அதற்குப் புத்துயிர் அளிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை இங்குள்ள மக்களுக்கு முழுமையாகக் காணப்படுகிறது என்பதை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் குறித்தும் அமைச்சர் சபையில் பிரஸ்தாபித்தார். இவ்விடயம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞன் விவகாரத்தில் சட்ட ரீதியாக எடுக்கக்கூடிய ஒரு சாதகமான தீர்மானம் எட்டப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.