தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! – கோத்தாபய உறுதி
நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பலரை நான் ஆட்சிக்கு வந்ததன் பின் விடுவித்துள்ளேன்.
அதன்படி ஏனையோர் தொடர்பான வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நீண்டகாலம் தடுப்பில் உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படுகின்றன.
மரண சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொற்றுப் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதுவரை இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நவம்பர் இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அன்டோனியோ குட்ரஸிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அன்டனியோ குட்டரெஸ் , ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன் எனவும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் எடுத்துரைத்துள்ளார்.
Leave a comment