கோட்டா மஹிந்த
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

‘அதிஉயர் சபை’யில் அரங்கேறப்போகும் அதிரடி மாற்றங்கள்! – பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!!

Share

‘பங்காளிகள் கைவிரிப்பு – சகாக்களும் கழுத்தறுப்பு’ –
அரசின் தலைவிதி இன்று நிர்ணயம்! பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது.

நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட பாதுகாப்பு கூட்டமொன்று சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை முன்னெடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு புறம் மக்கள் கொந்தளிப்பு. மறுபுறத்தில் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழப்பு என இரு முனை தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.

ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான சாதாரண பெரும்பான்மையையும் இன்று இழக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடும் என்பதால் இன்றைய நாடாளுமன்ற அமர்வு அதி முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

” இந்த அரசு பதவி விலக வேண்டும். மாறாக பதவியை தக்க வைத்துக்கொள்ள முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 50பேர்வரை சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நேற்று தகவல் வெளியிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன சபையில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

அத்துடன், விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை விடுக்கவுள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று 11 கட்சிகளின் கூட்டணியில் இணையக்கூடும் என்பதால் அரசு சாதாரண பெரும்பான்மையை இழப்பது உறுதியென கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

” நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.” – என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை வளைத்போட்டு கூட்டரசு – இடைக்கால அரசு அமைக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. இதற்கிடையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, காபந்து அரசொன்றை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே, அடுத்துவரும் 48 மணிநேரம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு எவ்வாறு சாதாரண பெரும்பான்மையை இழக்கும் என்பது தொடர்பில் ஏப்ரல் 03 ஆம் திகதி பதவிட்டிருந்தேன். அந்த அட்டவணை இங்கு மீள இணைக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் –

✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117
✍️ஈபிடிபி – 02
✍️தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01
✍️அரவிந்தகுமார் – 01
✍️டயானா – 01 – 122 ஆசனங்களே உள்ளன.

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க

✍️122 – 7 = 115

✍️ஆக – ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.

✍️115-2 = 113

✍️எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 – 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

✍️சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

✍️தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே! தேசிய

மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு.
✍️எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

✍️நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குசெல்லக்கூடும் . ( தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.) ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது.

✍️ பிரதமர் பதவி துறந்தால், அமைச்சரவையும் கலைந்துவிடும். பிறகு புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம். இது இடைக்கால அரசுக்கான நகர்வாக அமையலாம்.

✍️பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145ஆசனங்களை வென்றது.

✍️இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி – 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 02
பிவிதுரு ஹெல உறுமய – 01
கம்யூனிஸ் கட்சி – 01
லங்கா சமசமாஜக்கட்சி – 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ – 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.

✍️145 -26 = 119
எமது மக்கள் சக்தி – 01
தேசிய காங்கிரஸ் – 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன.

✍️119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்) எனவேதான், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.

புதய இணைப்பு

✍️ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி, பிரியங்கர உள்ளிட்டவர்களும் பதவிகளை துறந்துள்ளனர். மொட்டு கட்சி உறுப்பினர்கள் பலர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். எனவே, அரசு சாதாரண பெரும்பான்மையை இன்று இழக்கும் என்றே தெரியவருகின்றது.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...