இலங்கை
தமது உளவுக் கப்பலை கொழும்பில் நங்கூரமிட இலங்கை அனுமதி?
தமது உளவுக் கப்பலை கொழும்பில் நங்கூரமிட இலங்கை அனுமதி?
தமது உளவுக் கப்பலை கொழும்பில் நங்கூரமிட இலங்கை அனுமதி அளித்துள்ளதா என்ற குழப்பத்தின் மத்தியில் சீன உளவுக் கப்பல் கொழும்பு நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சீன உளவுக் கப்பலானது தற்போது மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியான தகவல்களின்படி, ஸி யான் 6 ரக கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பல் துறைக்குச் செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பிரியங்கா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான தனது பயணத்தை இரத்து செய்திருந்தார்.
இந்த கப்பல் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிதி சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் முக்கிய பங்காளிகளாகக் கருதுகிறது.
அதேநேரம் இருதரப்புக் கடன் வழங்குபவர்களிடம் 7.1 பில்லியன் டொலர்கள் கடனைப் பெற்றுள்ள இலங்கை, அதில் கணிசமான பகுதியான 3 பில்லியன் டொலர்கள் சீனாவுக்கு செலுத்தவேண்டியுள்ளது.