ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஒட்டியுள்ள தனித்தனி அறைகளில் அவர்கள் 4 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே மேலும் வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்ய பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார்.
அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர். பின்னர் நளினி நிருபர்களிடம் கூறுகையில், கணவர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.
#India