அரசியல்
கோட்டாவை ஓரம் கட்டும் மொட்டு தரப்பு!
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் படங்களை பொதுஜன பெரமுன கட்சி தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடாத்தப்படும் செய்தியாளர் சந்திப்புக்களின் போது பின்னணியில் ஓர் டிஜிட்டல் திரை காணப்படுவதுடன் அதில் கட்சியின் முக்கியஸ்தர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.எனினும் அண்மைய நாட்களில் அந்த டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் அதிபர் கோட்டாபயவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ்வாறு கோட்டாபயவின் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தமக்கு தெரியாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் கோட்டாபயவிற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருந்ததுடன், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு மக்களின் போராட்டம் வீரியம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், பொதுஜன பெரமுன கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் இழக்க நேரிடும் என்ற அச்சமும், கோட்டாபய ராஜபக்சவை பொது மக்கள் நிராகரித்ததனால் அவரின் படங்களைப் பயன்படுத்துவது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்னும் காரணத்தினாலும் இவ்வாறு கோட்டாபயவின் படங்களை தவிர்க்க முடிவெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login