WhatsApp Image 2022 08 09 at 3.14.49 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

வன்முறையாளர்களை ஒடுக்கிய இராணுவத்தினருக்கு நன்றிகள்!

Share

“வன்முறையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து சபையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்து சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கிய இராணுவத்தினருக்குத் தேசத்தின் புகழுரை உரித்தாகும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்கு இன்று முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இராணுவத்தினரைச் சந்தித்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற வந்த எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தாமல் அமைதியான முறையில் நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

நாடாளுமன்றத்தைப் பாதுகாத்த உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே, இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த மூன்று பிரதான நிறுவனங்கள் உள்ளன. நாடளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த மூன்று நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசமைப்பு சிதைந்துவிடும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நீங்கள் நாடாளுமன்றத்தைப் பாதுகாத்தீர்கள்.

ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதியின் வீடு வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது; பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைச் செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை.

மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை கையகப்படுத்தப்பட்டது.

அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டுக்குத் தீ வைத்துள்ளார்கள்.

ஆனால், சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் ஒரு பிரதமர் அலுவலகம் மட்டுமே இருந்தது.

கடந்த 13ஆம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க அலுவலகம் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிர்வாகியாக இயங்க இடம் கிடைக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினால், சட்டத்தை அமுல்படுத்த முடியாது. சட்டத்தை அமுல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் ஆட்சி இல்லை.

நீதிமன்றத்தைச் சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல் அல்ல. நாடாளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும்.

அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர், இந்தக் குழு வருவதை அறிந்ததும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முடித்து வைத்தார். நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க யாரும் இல்லை.

நாடாளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் சாசனம் பறிபோகும். எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். நாடாளுமன்றத்தை இழந்தால் ஆட்சி பறிபோகும். நாடாளுமன்றம் இல்லாதுபோனால் பாதுகாப்பு அமைச்சகத்தை அமுல்படுத்த முடியாது. அதனால்தான் எல்லோரையும் நம்பி அந்த வேலையைச் செய்தார்கள்.

அதன்படி நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற வந்தவர்களை சுட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. நாடாளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இது வடக்கில் நடந்த பெரிய போர்கள் போல் இல்லை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை. பயங்கரவாதத்தை அழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள். இந்த நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாதுகாத்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அனுமதித்ததன் மூலம் அரசமைப்பு கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது அதை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முன்னோக்கிக் கொண்டு சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். உங்கள் பணி இப்போது முழுமையடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

புதிய அரசமைப்பு திருத்தங்களைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். புதிய நாடாளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளைக் கொண்டு வந்து அனைத்துக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இது விவாதிக்கப்படுகின்றது, இப்போது உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இதனைத் தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நினைவூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். நாம் இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரித்து, பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். நாடாளுமன்றம் செயற்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகின்றேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகின்றது.

1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று விவாதித்தோம். அதே நேரத்தில், நான் ஒக்டோபர் மாதம் லண்டன் சென்றேன். நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸைச் சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ. ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் அடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதைய இராணுவத் தளபதி வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்” – என்றார்.

இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உன்னத இடமான நாடாளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாகத் தடுத்த பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...