இலங்கை
வடக்கு வைத்தியர்களின் சம்பள குறைப்பு – நிலுவை தொகை வழங்க பணிப்பு!
வடக்கு மாகாண வைத்தியர்களின் சம்பள குறைப்பு தொடர்பில் உரியவர்கள் கவனத்துக்கு தெரியப்படுத்திய நிலையில், தற்போது குறித்த சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் கதிரமலை உமாசுதன் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் எமது வைத்தியர்களுக்கான சம்பள குறைப்பு இடம்பெற்றிருந்ததை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். இது தொடர்பான கலந்துரையாடலானது வட மாகாண ஆளுநர் மற்றும் வட மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த 28-ம் திகதி எமது அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர், எமது வைத்தியர்களின் சம்பள குறைப்பு தொடர்பான எமது கோரிக்கைக்கு விரைந்து எடுப்பதாகவும், இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் எமக்கு தெரிவித்திருந்தார்.
ஆளுநரால் எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம், குறித்த தொடர்பில் நாமும் எமது தாய் சங்கத்துக்கு இதனை தெரியப்படுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், இன்று எமது வட மாகாண இணைப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் கலந்துரையாடலை மேற்கொண்டபொழுது வட மாகாண வைத்தியர்களின் சம்பள குறைப்பை நிவர்த்தி செய்வதற்கு தேவையான ரூபா 45 மில்லியன் நிதி தமக்கு நிதி அமைச்சிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியைக் கொண்டு வைத்தியர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்படாமல் நிலுவையாக வைக்கப்பட்டிருந்த சம்பளத்தை வழங்குவதற்கு தாம் நாளையே அனைத்து வைத்தியசாலை அத்தியர்சகர்கள் ஊடாகவும் முழுமையான சம்பளத்தை வழங்குவதற்கு தாம் ஆவண செய்வதாகவும் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் உறுதியளித்திருக்கின்றார்.
இதனை நாங்கள் மனதார வரவேற்கின்றோம். மேலும் இவ்வாறான சம்பள குறைப்பு ஏற்படாது இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி மற்றும் சுகாதார சேவை வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையிலும் வைத்தியர்கள் தமது சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் இவ்வாறான சம்பள குறைவுகள், சம்பள வெட்டுகள் என்பன இடம்பெறாது உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்கள் என்பதை நாம் திடமாக நம்புகிறோம்.
இது தொடர்பில் எமது கோரிக்கைக்கு செவிமடுத்து, தனது கவனத்தை செலுத்தி, வைத்தியர்களின் சம்பளத்தை பெற்றுத்தருவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநருக்கு எமது பிரத்தியேக நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இதேவேளை, இந்த சம்பள குறைப்பு தொடர்பான எமது கோரிக்கையை ஏற்று, இதனை தீர்த்து வைப்பதற்கு பெரும் சிரத்தையுடன் தனது கண்டனங்களை தெரிவித்தும், இதனை தீர்த்து வைக்க தனது முழு முயற்சியிலும் ஈடுபட்டிருந்த எமது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் வைத்தியர் ஹரித அளுத்கே மற்றும் எமது வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன் ஆகியோருக்கும் எமது தாய் சங்கத்துக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login