தமக்கு பெற்றோலை வழங்க கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையால் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தொடக்கம் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் காலை 09 மணி போல குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தமையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்றபட்டது.
அதனை அடுத்து வரிசையில் காத்திருந்த பலரும் மாவட்ட செயலகம் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது அங்கு வந்திருந்த பொலிஸாரிடம் “ ஐ. ஓ. சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களுக்கான பெட்ரோல் வழங்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமையை அடுத்தே நாம் பெட்ரோலை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம்” என கூறி பத்திரிகை செய்திகளை பொலிஸாரிடம் காட்டினார்கள்.
அதேவேளை போராட்டம் நடத்தினவர்களுடன் மேலதிக மாவட்ட செயலர் ம. பிரதீபன் பேச்சு நடாத்திய போது, அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தான் எரிபொருள் விநியோகிக்க சொல்லி எமக்கு அறிவுறுத்தப்பட்டமைக்கே அமையவே தாம் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு அவ்வாறு அறிவுறுத்தினோம் என தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment