இலங்கையில் நாளை (27) முதல் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடனேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், இதற்காக ‘டோக்கன்’ முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் நேற்றிரவு (25) கூடிய பாதுகாப்பு சபைக்கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் காஞ்சன மேற்படி தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் நாளுக்கு நாள் எரிபொருள் வரிசை நீள்வதால், எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன. மறுபுறத்தில் வீதிகளை மறித்து, மக்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டுக்கு வருமென கூறப்பட்டிருந்த எரிபொருள் தாங்கிய கப்பல்களின் வருகையும் தாமதித்துள்ளது. இதனால் எரிபொருள் வரிசை மேலும் நீண்டு, அமைதியின்மை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வந்து, நிலைமை சீராகும்வரை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன், டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை குறித்து விளக்கமளித்த அமைச்சர்,
” எரிபொருள் பெறுவதற்காக வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு, மாற்றங்களை செய்ய முடியாத வகையில் சீல் வைக்கப்பட்ட டோக்கன் வழங்கப்படும். முப்படையினர் மற்றும் பொலிஸார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவர். டோக்கன் வழங்கும்போது, சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி இலக்கமும் பெறப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் வந்ததும், விநியோகிக்ககூடிய அளவான வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டு, விநியோக சேவை இடம்பெறும். உதாரணமாக 6, 600 லீற்றர் எரிபொருள் வருமானால், வாகனமொன்றுக்கு 30 லீற்றர் வீதம் வழங்கப்பட வேண்டுமெனில் டோக்கன் வழங்கப்பட்ட முதல் 220 பேருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
கப்பல்கள்வரும்வரை எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்கமுடியாது. எனவே, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். டோக்கனை வாங்கிய பிறகு வீடு செல்லுங்கள்.” – என்று குறிப்பிட்டார்.
அத்துடன், மாற்றுவழி இன்றியே எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது எனவும், இதற்காக கவலை அடைவதற்காகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்தியாவசிய சேவைகளுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.
அதேவேளை, ரஷ்யாவிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது எனவும் அமைச்சர் காஞ்சன குறிப்பிட்டார்.
” இராஜதந்திர நடவடிக்கையின் நிமித்தம் இரு அமைச்சர்கள் நாளை (27) ரஷ்யா செல்கின்றனர். இதன்போது எரிபொருள் விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும். சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். ” – என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் மண்ணெண்ணெய் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என்ற தகவலையும் அமைச்சர் குறித்த செய்தியாளர் மாநாட்டின்போது வெளிப்படுத்தினார். எனினும், மண்ணெண்ணெய் அத்தியாவசியமாக தேவைப்படுபவர்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்.சனத்
#SriLankaNews
Leave a comment