“மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதைத் தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராகச் செயற்படும் கொழும்பு மாவட்ட எம்.பியும் 43ஆம் படையணியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு நான் ஆதரவு வழங்கமாட்டேன். அதேவேளை, இந்த அரசை வீழ்த்தும் சதி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும் மாட்டேன்.
நாடாளுமன்றில் நான் தொடர்ந்தும் சுயாதீன உறுப்பினராகவே இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளில் அதிருப்தி இருந்தமையால்தான் நான் அதிலிருந்து விலகி சுயாதீன உறுப்பினராகச் செயற்படுகின்றேன்.
மக்களின் நன்மை கருதி அரசு முன்னெடுக்கும் செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவேன்.
எனது எதிர்கால இலக்கு தொடர்பில் இப்போது நான் சொல்லமாட்டேன். தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டே நான் பயணிப்பேன். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதைத் தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment