இலங்கை
5 மாதங்களாக எரிவாயு இல்லை!! – மக்கள் போராட்டம்
ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள், இன்று (03) போராட்டத்தில் குதித்தனர்.
அட்டன் – சாஞ்சிமலை பிரதான வீதியை மறித்து, வீதி நடுவே ‘வெற்று’ சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடுக்கி வைத்து, பதாகைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. அட்டனில் இருந்து சாஞ்சிமலை, பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வந்த மக்கள் நீண்ட நேரம் வாகங்களில் காத்திருந்தனர். பலர் மாற்று வழிகளைத்தேடி திரும்பி சென்றனர். பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
“எங்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. மண்ணெண்ணையும் பகிரப்படவில்லை. நகரப்பகுதி என்பதால் விறகடுப்பு பயன்படுத்துவதிலும் ஆயிரம் தடைகள்.
இந்நகரில் லிற்றோ சமையல் எரிவாயு முகவர்கள் மூவர் இருக்கின்றனர். அவர்களுக்கு குறித்த நிறுவனத்தால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லை. இதனால் நாம் எல்லா வழிகளிலும் துன்பப்படுகின்றோம். எனவே, சமையல் எரிவாயுவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், சமையல் எரிவாயுவைக்கூட விநியோகிக்க முடியாமல் திண்டாடும் அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
எரிவாயு வழங்குவதற்கான கூப்பன் தமக்கு வழங்கப்படாமைக்கும் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நோர்வூட் பொலிஸார் முற்பட்டனர். எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு பிறகு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போக்குவரத்து நடவடிக்கையும், வழமைக்கு திரும்பியது.
You must be logged in to post a comment Login