முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவருடைய பாதுகாப்பு அதிகாரியின் வாக்குமூலத்தில், “நேற்று காலை 7.00 மணியளவில், சார், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார்.
நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.
அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.
அத்துடன், விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, பொலிஸ் திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகும்.
குறித்த சம்பவமானது, இடம்பெற்ற போது மனைவியும் இளைய மகனும் வீட்டிலிருந்தனர். அவர்கள் உடனடியாக அவரை முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், இருப்பினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்தது உயர் அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கினர். சி. டி. விக்கிரமரத்ன உயிரை மாய்த்துக்கொள்ள பயன்படுத்திய கைத்துப்பாக்கி வீட்டின் வரவேற்பறையில் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், விக்ரமரத்னவின் ஒரு மகனின் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது. சி. டி. விக்ரமரத்ன ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் நேற்று மாலை வரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதலில் சாரா ஜேஸ்மின் உயிரிழந்துவிட்டதாக டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சாரா ஜேஸ்மின் சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகாத நிலையில், மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை, சி. டி. விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டது. அக்காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக பிரசாத் ரணசிங்க கடமையாற்றினார்.
கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராகச் சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பொலிஸ் மா அதிபராக நிரந்தரமாக்கப்பட்ட அவர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 வரை அந்தப் பதவியில் கடமையாற்றியதுடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் அவருக்கு மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.