இலங்கையில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்திய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான நிதியுதவிக்கான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்தப் புயல் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.
சுமார் 520,000 வயதுவந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 22,500 க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 194,000 க்கும் அதிகமான வயதான பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளிக்கும் பின்னரான சூழலில்,சுகாதாரச் சேவைகள் தடைப்பட்டதாலும், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பாதுகாப்பு மற்றும் தனிமைப் பாதுகாப்பு இல்லாமையாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் வன்முறைக்கான அபாயமும் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உடனடியாக 1,225 அத்தியாவசியப் பொதிகளை விநியோகித்த ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம், நிலைமை மோசமடைந்து வருவதால், 208,000 க்கும் அதிகமான பெண்களுக்கு இனப்பெருக்கச் சுகாதாரம், வன்முறைத் தடுப்பு மற்றும் மனநல ஆதரவு போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், தேவையான நிதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுவோரைச் சென்றடைய உடனடி சர்வதேச ஆதரவை வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் உலக நாடுகளையும் நன்கொடையாளர்களையும் அவசரமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.