சென்னையில் நாளை பாடசாலைக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னையில் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரம் – வட தமிழக கடற்கரை நோக்கி நகரவுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களை அவதானத்தோடு இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
#india
Leave a comment