மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது மற்றும் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படும் ராஜபக்சாக்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவது என அரசாங்கம் இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது.
இந்தச் செயற்பாடுகள் வெற்றிபெறும் பட்சத்தில், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது திசைகாட்டி (தேசிய மக்கள் சக்தியின் அடையாளம்) அளித்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் ஒரு பெரிய அளவிலான மற்றும் மிகவும் இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது:
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளைத் தண்டிப்பது. ராஜபக்சாக்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செல்வத்தை மீட்பது.
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூர் குடிமகனாக உள்ளார்.
அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்க அதிகாரிகள் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் சிறப்புச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகேந்திரன் இலங்கைக்குத் திரும்புவதைத் தடுத்த சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் உள்ள சட்டத் தடைகளைத் தீர்ப்பதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்று வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இரகசிய கலந்துரையாடல்: இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுன் மகேந்திரனுடன் அதிகாரிகள் மிகவும் இரகசியமான கலந்துரையாடலை நடத்தியுள்ளதாகவும் அறியப்படுகிறது.