“வெளிநாடுகளின் அழுத்தங்களால் இலங்கை ஆபத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தற்போது எரிமலையின் மீது இருக்கின்றது என்றே கூற முடியும். அந்த எரிமலை எப்போது வெடித்துச் சிதறும் என்பதை எவராலும் கூற முடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”சீன சார்பு ஆட்சியாளர்கள் உருவான நாளில் இருந்து நாடு ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் ருவான்வெலிசேய, தலதா மாளிகை ஆகியவற்றுக்குச் சென்று நாட்டில் எந்த தேசிய வளங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி எடுத்துக்கொள்கின்றனர்.
அவ்வாறு கூறிய ஒரு அணி 2000ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து, பொருளாதார வளங்களை விற்பனை செய்தது. இறுதியில் அவற்றைக் காப்பாற்ற வரிசையாக வழக்குகளைத் தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லங்கா வைத்தியசாலை, துறைமுகக் காணிகள், இலங்கை போக்குவரத்துச் சபை என நாட்டின் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டன.
வழக்குகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் பெற்றுக்கொண்டோம். இதனை அரசோ அல்லது எதிர்க்கட்சியோ செய்யவில்லை. உயிருக்கு ஆபத்து இருப்பதைக் கவனத்தில் கொள்ளாது அவற்றை நானே செய்தேன்.
கடந்த அரசின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை துறைமுத்தை சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுத்தன் நெருக்கடியை தற்போது இலகுவாகத் தீர்க்க முடியாது.
சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதால், அமெரிக்காவும் தனக்கும் அது வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
இலங்கை சீனாவுக்குச் சார்பான நிலைப்பாட்டில் இருக்கும் அவரை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விடுபட முடியாது” – என்றார்.
Leave a comment