மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்ததால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. எதிர்பார்த்த கனமழை, மிக கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டது. இந்த நிலையில், வடதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.
தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும். ஆனாலும் தமிழகத்தில் வரும் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment