இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட திருமணங்களில் 62 சதவீதமானவை சமூக ஊடகச் செயல்பாடுகளால் (Social Media Activity) முறிவடைந்துள்ளன. திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர், சமூக ஊடகங்களில் பழைய பதிவுகளைத் தேடிப் பார்த்துள்ளனர். குறிப்பாக, முந்தைய காதல் உறவுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் கண்டறியப்பட்டதால் ஏற்பட்ட மோதல்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்தாகக் காரணமாகியுள்ளன.
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதும் இத்தகைய போக்கின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 38 சதவீத திருமண ரத்துகளுக்கு குடும்பத்தில் திடீர் மரணம் அல்லது விபத்துக்கள், மணமக்களின் உடல்நலக் கோளாறுகள், இரு குடும்பங்களுக்கும் இடையிலான பரஸ்பர தகராறுகள் காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்கள் மற்றும் கடந்த காலப் பதிவுகள் சமூக ஊடகங்கள் வாயிலாக எளிதாகக் கண்டறியப்படுவது, இன்றைய காலக்கட்டத்தில் உறவுகளின் உறுதித்தன்மையைச் சோதிக்கும் ஒரு சவாலாக மாறியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.