இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வழமைபோல இம்முறையும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பல பிரமுர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள். எனினும், ஜே.வி.பி. உட்பட மேலும் சில கட்சிகள் அரச நிகழ்வுகளை புறக்கணிக்கும் என தெரியவருகின்றது.
குறிப்பாக தேசிய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணிப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தீர்மானித்துள்ளமையானது அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.
கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பேராயர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அத்துடன், சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் விசேட ஆராதனையையும் நிறுத்தியுள்ளார். இதனால் கத்தோலிக்க சமூகத்தின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒருபுறம், எல்லா விடயங்களுக்கும் வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை மறுபுறம். இந்நிலையில் நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுவதாக எதிரணிகள் சுட்டிக்காட்டுகின்றன.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்துவிட்டது எனக் கூறப்பட்டாலும் 1972 இல்தான் முழுமையான சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்துக்காக அன்று அனைத்து இன மக்களும் ஓரணியில் இணைந்து போராடினார்கள். ஆனால் இன்று அந்நிலைமை இல்லை. மக்கள் இனங்களாகவும், மதங்களாகவும் பிரிந்து நிற்கின்றனர். அதற்கு சிங்கள, பௌத்த பேரினவாதமே பிரதான காரணமாக பார்க்கப்படுகின்றது.
‘வாழு வாழவிடு’ என்ற கோட்பாட்டை மறந்து, நாங்கள் மட்டும்தான் ஆள வேண்டும், நன்றாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை பேரினவாதிகள் விதைத்துள்ளதாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலை இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தாலும், தமக்கு இன்னும் சுதந்திரம் இல்லை என அவர்கள் கருதுவது நியாயம்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இந்நாட்டில் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
அதேவேளை, இலங்கை சுதந்திரமடைந்துவிட்டது எனக் கூறப்பட்டாலும் கடல் வளமானது அந்நிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும் சூழ்நிலை தொடர்கின்றது. இதற்கு எதிராக வடக்கில் இன்றளவிலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அத்தகைய போராட்டங்களை நடத்தும் உரிமை – சுதந்திரம்கூட தட்டிபறிக்கப்படும் நிலைமை காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.
தமிழர் தாயகத்தில் இன்று பல இடங்களில் கறுப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது. தமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை, அடக்குமுறைகள் தொடர்கின்றன என்பதை இதன்மூலம் எடுத்துக்காட்ட அவர்கள் விளைகின்றனர்.
எனவே .இவற்றை ஒடுக்காமல் – தடுக்காமல் அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து . பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வர வேண்டும். அப்போதுதான் இலங்கையில் வாழும் அனைவரும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கக்கூடியதாக இருக்கும்.
பறவைகளையும், கொடிகளையும் பறக்கவிடுவதால் மட்டும் சுதந்திரம் மலர்ந்துவிடாது. நாட்டு பற்று உயர்ந்துவிடாது. எனவே, புதிய அரசமைப்பின் ஊடாகவேனும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, தமிழ் மக்கள் இம்மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை உருவாக வேண்டும். அவ்வாறு நடந்தால் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை நாம் அனைவரும் இலங்கையர்களாக கொண்டாடலாம்.
இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தாலும் பொருளாதார ரீதியில் முன்னோக்கி முடியாமைக்கு தேசிய இனப்பிரச்சினையே பிரதான காரணம். எனவே, இன்றைய ஜனாதிபதியின் உரை எவ்வாறு அமையும் என பார்ப்போம். சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு இருந்த உரிமையை பறிந்த இந்த அரசு, புதிதாக எதையும் வழங்குமா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
#SriLanka
Leave a comment