கொரோனா பெருந்தொற்று, டொலர் தட்டுப்பாடு, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வீழ்ச்சி, வருமானம் ஸ்தம்பிதமென கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பலம்பொருந்திய நாடுகள்கூட, பொருளாதார சரிவை எப்படி சமாளிப்பது, வருமான வழிமுறைகளை எவ்வாறு அதிகரிப்பது என பலகோணங்களில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன. பல திட்டங்களை வகுத்துக்கொண்டும் இருக்கின்றன.
இந்நிலையில் இருப்பதைக் கொண்டும், இல்லாதவற்றை திரட்டியும், மேலதிகமாக ஏதாவது தேவைப்படின் கடன்களை வாங்கியேனும் சமாளிப்போம் என்ற கோணத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின் பாதீடு அமைந்துள்ளது.
குறிப்பாக பொருட்களின் தொடர் விலையேற்றம், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, வருமானம் இழப்பு என திண்டாடிக்கொண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நிவாரண அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சம்பள உயர்வு இடம்பெற்றிருந்தாலும் ஏனைய அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்புக்கான யோசனை முன்வைக்கப்படவில்லை. இது பல தரப்பினருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை அதிகரிப்பு, அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு, அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுபடுத்தல் உட்பட முன்மாதிரியான சில திட்டங்களும் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை உரிய வகையில் அமுல்படுத்தப்படுமா என்பதே எதிரணிகளின் கேள்வியாக உள்ளது.
அதேவேளை, காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்கள்’ என்ற வசனத்தின் ஊடாக இது போர்காலத்துக்குரியது மட்டுமல்ல என்ற தகவலை நிதி அமைச்சர் வழங்கியுள்ளார்.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்கியிருந்தால் ஆறுதல் அடைந்திருப்பர். மாறாக இழப்பீடென்பது அவர்கள் எதிர்பார்க்கும் நீதி நிவாரணம் அல்ல என்பதே வெளிப்படை.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 2 ஆயிரத்து 284 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த செலவீனங்களாக 3 ஆயிரத்து 912 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஆம் நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 628 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. கடன்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்வதே அரசின் பிரதான திட்டமாக உள்ளது என்றே எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே, அடுத்துவரும் சில வருடங்களுக்கும் மக்களுக்கு குறிப்பிட்டு கூறுமளவுக்கு நிவாரணங்கள் கிடைக்கப்போவதில்லை என்பதை இதன்மூலம் ஊகிக்க முடிகின்றது.
#SriLankaNews
Leave a comment