ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் படையை அணிதிரட்டி பாரியதொரு போராட்டத்தை நேற்று நடத்தியது. இப் போராட்டம் தொடர்பில் தமிழர் அரசியல் தரப்பிலும் தற்போது பலகோணங்களில் பேசப்பட்டு வருகின்றது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக அணிதிரண்ட அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு – கொள்ளுப்பிட்டி வழியாக பேரணியாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை வந்தடைந்தனர்.
அங்கு போராட்டக்காரர்களுக்கு மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆட்சிமாற்றத்துக்கான அறைகூவலையும் விடுத்தார். அரசின் அடக்குமுறை செயற்பாடுகளைக் கண்டித்ததுடன், ஜனநாயக விரோத மற்றும் ஊழல் மோசடிகளை பட்டியலிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வெற்றியா, தோல்வியா என பல தரப்பினரும் தற்போது கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். வெற்றியா, தோல்வியா என்பதைவிடவும் மக்களுக்கு தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு பொதுக்களம் கிடைத்தது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இதனால்தான் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் தடைகளை எல்லாம் தாண்டி, கொரோனா பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் மக்கள் அணிதிரண்டனர் என்பதை இதற்கான ஆதாரமாக, அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அரசுமீது கடும் சீற்றத்தில் உள்ளனர். தொடர் விலையேற்றத்தால் மக்களும் கடுப்பில் உள்ளனர். அரச ஊழியர் உட்பட மேலும் பல தரப்பினரும் அதிருப்தி நிலையிலேயே உள்ளனர். இதன் காரணமாகவே அண்மைக்காலமாக நாட்டில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்களின் மனநிலையை கொழும்பு கூட்டம் ஊடாக வெளிப்படுத்தியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி. இது அரசுக்கும் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. தடைகளை தாண்டி இந்தளவு மக்கள் கூட்டம் வருமென ஆட்சியாளர்கள் கருதவில்லை. அதேபோல நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெறலாம் எனவும் நம்பினர். எவையும் கைகூடவில்லை.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் அரசு தேர்தலொன்றுக்கு செல்லாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.
வழமையாக எதிரணி போராட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை ஆளுங்கட்சியில் உள்ளவர்கள், ஏதேவொரு அடிப்படையில் குழப்புவார்கள். ஆனால் கொழும்பு போராட்டத்துக்கு மொட்டு கட்சி ஆதரவாளர்களால் குழப்பங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இதன்மூலம் அரச ஆதரவாளர்களின் மனநிலையும் என்னவென்பது தெளிவாகின்றது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆங்காங்கே பதற்ற நிலை உருவானது.
போராட்டத்தில் பங்கேற்ற எம்பிலிப்பிட்டிய பகுதி இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, தாக்கி கொன்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் சுயாதீன விசாரணையையும் கோரியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார். போராட்டத்துக்கும், இந்த சம்பவத்துக்கும் இவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment