மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், மக்கள் சக்திக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாமல் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளது கஸகஸ்தான் நாட்டின் அமைச்சரவை.
அந்நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமை இன்னும் முழுமையாக தணியவில்லை என்ற போதிலும், அமைச்சரவை பதவி விலகியுள்ளமை தொடர்பில் பல நாடுகளில் பேசப்படுகின்றது.
சில நாடுகளில் அதுவே பேசுபொருளாதாகவும், தமது நாட்டு அரசியலுடன் ஒப்பிட்டு பேசப்படும் முக்கிய விவகாரமாகவும் மாறியுள்ளது.
வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, வேலையிண்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கசகஸ்தான் மக்களுக்கு, எரிபொருள் விலையும் சடுதியாக அதிகரித்ததால் பெரும் சுமை ஏற்பட்டது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கினர்.
ஆரம்பத்தில் சிறு அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுத்தன. இறுதியில் அது வன்முறையாக மாறியது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம்கூட அமுல்படுத்தப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு பொறுப்பேற்று, அமைச்சரவை பதவி துறந்துள்ளது. அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உண்மையாலுமே ஆட்சியமைப்பதற்கான அதிகாரம் என்பது மக்கள் வசம்தான் இருக்கின்றது. அந்த அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாகவே கைமாற்றுகின்றனர்.
அந்த அதிகாரத்தை பெறுபவர்கள் ஆட்சி அமைக்கின்றனர். ‘தேர்தல்’ என்ற நடவடிக்கைமூலமே அதிகார கைமாற்றம் இடம்பெறுகின்றது.
தமது அதிகாரத்தை பெற்றவர்கள் உரியவகையில் ஆட்சிசெய்யவில்லையெனில் அடுத்த தேர்தலில் மாற்று தரப்பிடம் அதிகாரத்தை கையளிப்பதற்கான அதிகாரமும் மக்கள் வசம்தான் உள்ளது.
ஆனால் நெருக்கடிகள் தலைதூக்கும் பட்சத்தில் ஜனநாயக வழியிலான போராட்டங்கள்மூலம் அரசை விரட்டுவதற்கான வல்லமையும் மக்கள் சக்தியிடம் உள்ளது.
மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு பல அரசுகள் முற்பட்டாலும் அவை கைகூடுவதில்லை.
இராணுவ ஆட்சிகள் அமைந்தாலும் அவற்றின் எதிர்காலம் என்பது உறுதியானதாக இல்லை. சூடானில்கூட மக்கள் போராட்டங்களால் பிரதமருக்கு பதவி துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கையிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய யுகம் உருவாகியுள்ளது.
விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் பஞ்சம்கூட ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நள்ளிரவிலேயே வரிசைக்குசென்றுவிடும் நகரவாசிகள், கிடைக்கவில்லையென்றால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
அரசுமீது கடும் சீற்றத்தையும் வெளிப்படுத்துவதை நாளாந்தம் செய்திகளில் காண மற்றும் கிரகிக்ககூடியதாக உள்ளது.
அதேபோல விவசாயிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கு எதிராக மக்களின் போராட்டம் தற்போதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
எதிரணிகளும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளன. அரச தலைவருக்கு எதிராககூட மக்கள் கூச்சலிடும் நிலை காணப்படுகின்றது.
அமைச்சர்களுக்கு பொது நிகழ்வுகளில் சுதந்திரமாக பங்குபற்ற முடியாதளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனால்தான் வருமான வழிமுறைகள் இல்லாவிட்டாலும்கூட அவசர அவசரமாக 5000 ரூபா நிவாரணத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த மக்கள் பயன்பெற முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது.
வருமான வழிகள் இன்றி பணத்தை அச்சிட்டு வழங்குவதால் அது பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் என்பதுடன், பொருட்களுக்கான விலைகளையும் உச்சம் தொட வைக்கும். அது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும்.
மக்களின் மன நிலையை அம்பலப்படுத்திய இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.
விரைவில் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. மக்கள் எதிர்ப்புகளை சமாளிக்கவே அரசு இவ்வாறு செய்கின்றது. சிலவேளை விவசாயத்துறை அமைச்சர்கூட மாற்றப்படலாம்.
பொருளாதார நெருக்கடி வரும், மக்கள் வீதிக்கு இறங்குவர் என்ற அச்சத்தால்தான் 2015 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்கூட்டியே தேர்தலுக்கு சென்றார்.
அத் தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். ஆனால் பதவி காலம் முடியும்வரை ஆட்சியில் இருந்திருந்தால் அது அவருக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
ஜனாதிபதி கோட்டா பதவியேற்று ஈராண்டுகள்தான் ஆகின்றன. எனவே, இந்த அரசு பதவி விலகாது.
மக்கள் வீதிக்கு இறங்கி போராடினால்கூட மக்கள் போராட்டங்களை திசைதிருப்புவதற்கான ஏற்பாடுகள் எப்படியும் அரசு வசம் இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளாட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தினால்கூட மத்திய அரசில் மாற்றம் வரப்போவதில்லை.
மக்களின் மனநிலையை அறிந்து ஜனநாயக வழியில் இந்த அரசு பதவியும் விலகாது. அதேபோல ஆளுங்கட்சி உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சி அமைக்கும் நிலையில் எதிரணியும் இல்லை.
ஆக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பானது, அரசை சற்று பின்வாங்க வைக்குமே தவிர, ஆட்சி மாற்றத்துக்கான சாத்தியங்களை ஏற்படுத்தாது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
#Artical
Leave a comment