அரசியல்கட்டுரை

மஹிந்தவுக்கு எதிராக மகாசங்கத்தினர் களத்தில் – இன்று தீர்க்கமான முடிவு

Share
Gotta and mahinda
Share

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துவரும் நிலையில், புதிய பிரதரின்கீழ் இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமது அணியுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதற்கான இணக்கப்பாட்டை வெளியிட்டார் என இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், “ நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டது.

பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்படி தேசிய சபையின் வழிகாட்டலுடன்தான் நியமிக்கப்பட வேண்டும், அமைச்சுகளின் செயலாளர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உட்பட அரச நிர்வாகக் கட்டமைப்பின் உயர் பதவிகளுக்கான நியமனங்களும் தேசிய சபை ஊடாகவே இடம்பெறவேண்டும் என கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.” எனவும் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை, சர்வக்கட்சி இடைக்கால அரசு, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையிலேயே தற்போதைய பிரதமர் அல்லாமல், புதிய ஒருவரின்கீழ் இடைக்கால அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

✍️ பிரதமர் பதவி குறித்த இழுபறி தொடர்கிறது
எனினும், ஜனாதிபதி ஊடகப்பிரிவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசொன்றை அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் எனக் கூறப்பட்டிருந்தாலும், புதிய பிரதமரின் கீழ் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.

“ அரசின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதன் முதற்கட்டமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.
கட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கும் பொதுத் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் தாம் அதற்கு இணங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் ஐந்து பேரை பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.” – என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பு இறுதியானது அல்ல, எனவே, அடுத்துவரும் நாட்களிலும் பேச்சுகள் தொடரவுள்ளன.
“ அரசை பாதுகாப்பதற்கு நாம் இந்த முயற்சியில் இறங்கவில்லை. நாட்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல் ஸ்தீரத்தன்மையொன்று அவசியம். அதற்காகவே சர்வக்கட்சி இடைக்கால அரசு யோசனையை சுதந்திரக்கட்சி முன்வைத்தது.” – என்று சுதந்திரக்கட்சியின் அரசியல் நகர்வையும் மைத்திரிபால சிறிசேன நியாயப்படுத்தியுள்ளார்.

✍️பிரதான எதிர்க்கட்சி எதிர்ப்பு
ஜனாதிபதி பதவி விலகாமல், அமையும் அரச கட்டமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன,

“ ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவரை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை திரட்டிவருகின்றோம். ஆதரவு வழங்க மறுப்பவர்களின் பெயர் விவரம் அம்பலப்படுத்தப்படும்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவருவது பற்றி ஆராயப்படுகின்றது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக அரசமைப்பு ரீதியில் பாவிக்கக்கூடிய அத்தனை அஸ்திரங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தும்.” – என்று திட்டவட்டமாக அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால அரசுக்கு போர்க்கொடி தூக்கினார்.

அதேபோல பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ச நீடிக்க வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். பிரதமருக்கான பெரும்பான்மை உள்ளதாகவும் அவர்கள் இடித்துரைத்துவருகின்றனர். இதனால் ‘புதிய பிரதமர்’ என்ற விடயம் இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

✍️ மகா சங்கத்தினர் களத்தில்
இந்நிலையில் புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு, எதிரணிகளை ஒன்றினைக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர் இறங்கியுள்ளனர். புதிய பிரமரின்கீழ்தான் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,
“ புதிய பிரதமரின்கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.

மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் இன்று (30) கொழும்புக்கு வருகின்றனர். இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

” மகாசங்கத்தினரின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின்கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சி தலைவர்களுக்கு மகா சங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள்.” – என்று ஓமல்பே சோபித தேரர் இன்று அறிவித்தார்.

மகா சங்கத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஓர் நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இம் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பங்கேற்பது குறித்து அக்கட்சி முடிவு எடுக்கவில்லை என தெரியவருகின்றது.

ஆர்.சனத்

#SriLanka #Article

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...