உலகின் பெயர்போன கொண்டாட்டங்கள் அத்தனையும் இன்று அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறி வருகின்றன.
நெருக்கடிமிக்க உலகில் எதையெதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கிடைக்கக் கூடிய அத்தனை கொண்டாட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்கின்றமை ஓர் சாதகமான அணுகுமுறையாகவே பார்க்கப்பட வேண்டும்.
அவ்வாறான கொண்டாட்டங்களில் ஒன்று நீண்டகாலமாக மேலைத்தேய நாட்டவர்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையாகும்.
இவ்வாறு கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகை (#Halloween festival) சமகாலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா கனடா உள்ளிட்ட நாடுகளை கடந்து ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவி வருகின்றது.
பெரும்பாலும் மேலைத்தேயவர்களால் பரப்பப்பட்டு தற்போது உலகின் கணிசமான மக்கள் தொகையினரால் பின்பற்றப்படும் கிறிஸ்தவ மதத்தில் நவம்பர் மாதம் என்பது இறந்துபோன ஆத்மாக்களை நினனவுகூர்வதற்காக அர்ப்பணிக்கபட்ட மாதமாக காணப்படுகின்றது.
இந்த அனுஷ்டானங்கள் மத வழிபாடுகளாகவும், இன்னும் பல நினைவுகூரல்களாகவும் கொண்டாடப்படுகின்றன.
இந்த பின்னணியிலேயே முதலாம் உலகப்போர் நிறைவடைந்த காலம் முதல் பொதுநலவாய நாடுகளால், உலகப்போரில் மரணமடைந்த ஆயுதம் தாங்கிய வீரர்களை நினைவுகூரும் பொப்பி தினம் அல்லது பொப்பி மலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், மரித்தவர்களை நினைவுகூரும் வகையிலான கார்த்திகை மாதத்தை வரவேற்கும் வகையில், ஒக்டோபர் மாதத்தின் இறுதி நாளான ஒக்டோபர் 31 அன்று குறித்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த கொண்டாட்டங்களின் போது எலும்புக்கூடுகள் அல்லது இறந்த ஆத்துமாக்களை நினைவுகூரத்தக்கது வகையிலான ஆடைகள் அலங்காரங்களை அந்தந்த நாட்டின் மக்கள், குறிப்பாக சிறுவர்கள் அணிந்துகொண்டு தமது அயலவர்களை சந்தித்து தமது அலங்காரங்களை ஏற்ற வகையான வெளிப்பாடுகளை செய்து காட்டுவது வழக்கமாகும்.
ஓர் மத நம்பிக்கையையாக அல்லது ஓர் மதம் சார்ந்த செயற்பாடாக குறிப்பிட்ட ஒரு சில நாடுகளால் விளக்கப்படும் ஹலோவீன் பண்டிகையானது, வெறுமனே மக்கள் மத்தியில் இருக்கும் மரணம் குறித்த அச்சத்தை போக்குவதற்கான செயற்பாடு என ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பண்டிகைக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என குறித்த தரப்பு வாதிடுகின்றது.
இந்த பின்னணியில், மேற்குறித்தவாறு அலங்காரமிடும் சிறுவர்கள் தமது அயலவர்களுடைய இருப்பிடங்களுக்கு சென்று தாம் அவர்களை அச்சுறுத்தி விடுவோம் என விளையாட்டாக மிரட்டி மிட்டாய், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட சிறிய பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வர்.
இவ்வாறான பரிசில்கள் மற்றும் பணப்பரிசுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது மிக விரைவாகவே சர்வதேச நிறுவனங்களை எட்ட ஆரம்பித்தது.
அதன்படி, குறித்த நடவடிக்கையானது உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு யுனிசெப் நிறுவனம் பணம் சேகரிக்க ஆரம்பித்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை மூலம் நூற்று இருபது மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான தொகை இதுவரை மாணவர்களை பயன்படுத்தி திரட்டபட்டுள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை 2006 ஆம் ஆண்டில் கனடாவில் வேறு சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மாற்றப்பட்டதாகவும் இந் நிதி திரட்டல் நடவடிக்கை வேறு முறையில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கும், ஒருவிதமான உணவு வகை இந்த பண்டிகையுடன் தொடர்புபடுகின்றது. தமது கலாசாரம் மற்றும் தமது நாட்டின் விளைபொருட்களுக்கு ஏற்றவகையாக இவ் உணவுப் பழக்கம் கைக்கொள்ளப்படுகின்றது.
மேலும் குறித்த பண்டிகை காலத்தில் கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு, பாடசாலைகள் மற்றும் பொது விடுமுறைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் வழங்குகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இ க்கொண்டாட்டமானது எடுத்த மாத்திரத்தில் எல்லா நாடுகளாலும் கொண்டாடப்படாவிட்டாலும், சமகாலத்தில் ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகின்றது.
எவ்வாறாயினும், நெருக்கடிகள் உலகை சூழப் படர்ந்துள்ள காலப்பகுதியில் குறித்த நெருக்கடிகளில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக்கொள்ள இவ்வாறான பண்டிகைகள் உதவுகின்றமை மிகப்பெரும் ஆறுதல் என்பதில் ஐயமில்லை.
Photos Credit – #BBCNews
Leave a comment