அரசியல்கட்டுரை

21 ஐ வெகுவிரைவில் நிறைவேற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்!

Share
IMG 20220527 WA0032
Share

அரசியலமைப்பிற்கான 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் – திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகு விரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அது தொடர்பில் அரசியல் கட்சிகளின் திருத்தங்கள் மற்றும் யோசனைகளை உள்வாங்குவதற்கும் சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய பிரதம அமைச்சரின் செயலகத்தில் குறித்த கூட்டம் இன்று (27) மாலை நடைபெற்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயாதீன அணிகள், 43 ஆம் படையணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சரவைக் கூட்டம் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது, உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம், நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டது. அன்றைய தினம் அச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படவில்லை.

மாறாக 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கும், அது சம்பந்தமாக கட்சிகளின் திருத்தங்கள் மற்றும் யோசனைகளை உள்வாங்கி, 21 ஐ இறுதிப்படுத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றைய (27) கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , பிரதிநிதிகள் தமது கட்சிகளின் யோசனைகளை மற்றும் திருத்தங்களை முன்வைத்தனர்.

“ 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே 21 அமைய வேண்டும். எனினும், 19 பிளஸ் என்பதற்கு பதிலாக 19 மைனஸ்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாற வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது வலியுறுத்தியுள்ளார். அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான கால எல்லையும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

அத்துடன், எக்காரணம் கொண்டு இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடைவிதிக்கும் ஏற்பாட்டில் தளர்வு போக்கை கடைபிடிக்கக்கூடாது என சில கட்சிகளின் தலைவர்கள் இடித்துரைத்துள்ளதுடன், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெற்றாலும், சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே அமைய வேண்டும் என தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் இதன்போது எடுத்துரைத்துள்ளனர்.

இறுதியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் 21 ஐ நாடாளுமன்றத்தில் வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு கட்சி இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. எனவே, அக்கட்சிகளின் யோசனைகளையும் உள்வாங்கி, எதிர்வரும் 03 ஆம் திகதி மீண்டும் கூட்டத்தை நடத்தி, 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை திப்படுத்துவதற்கு கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முதலில் 21 ஐ நிறைவேற்றிவிட்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பை முழுமையாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பது பற்றியும் பரீசிலிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதமர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி புறக்கணித்தது. எனினும், தமது கட்சியின் யோசனைகளை நிதி அமைச்சருக்கு அனுப்பு வைப்பதற்கு அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

“ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி தாவினால் அவர் எம்.பி. பதவியை இழப்பார், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரச உயர் பதவிகளை வகிப்பதற்கும் 21 இல் தடை விதிக்கப்பட வேண்டும், அமைச்சுகளின் செயலாளர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நியமிக்கப்பட வேண்டும், நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் குறைக்கப்பட வேண்டும்,” உட்பட மேலும் சில முக்கியமான யோசனைகளை தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ளது.

ஆர்.சனத்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...