கட்டுரை
உக்ரைன், ரஷ்யா போரும் – இலங்கையில் மூண்டுள்ள அரசியல் சமரும்!
ரஷ்யாவை சீண்டினால் ‘பேராபத்து’ என்பது தெரிந்தும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள்மீதான அதீத நம்பிக்கையால் அக்கினிப்பரீட்சையில் ஈடுபட்டது உக்ரைன். அந்நாடு இன்று அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.
கைகொடுப்போம், காப்போம் என நம்பிக்கையளித்த நாடுகளோ அந்த உறுதிமொழியை உரிய வகையில் நிறைவேற்றவில்லை. ஆனாலும் உக்ரைனின் காலைவாரவும் இல்லை. கழுத்தறுப்பு செய்யவும் இல்லை. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரப் போரை மேற்படி நாடுகள் தொடுத்துள்ளன. இதுகூட ரஷ்யாவுக்கான ‘கூட்டு’ தாக்குதலாகவே கருதப்படுகின்றது.
சரி இவ்விடயம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்னர் இலங்கையில் மூண்டுள்ள அரசியல் போர்மீது அவதானம் செலுத்துவோம்.
பண பலம், படைபலம், அரசியல் பலம் என அத்தனையும் பஸிலிடம் இருக்கின்றது. அதுமட்டுமல்ல தனித்து ஆட்சியமைப்பதற்கான சாதாரணப் பெரும்பான்மையையும் அவர் உருவாக்கிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ளது.
தேவையேற்படின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான ‘குறுக்கு வழி’ அரசியலும் பஸிலுக்கு கைவந்த கலை.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சர்வ வல்லமை கொண்ட நாடு என்பதுபோல, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சமரில் பலம் பொருந்திய நபராக பஸில் விளங்குகின்றார். ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யாவிடம் ‘எதையும் தடுத்து நிறுத்தும்’ வீட்டோ அதிகாரம் இருப்பதுபோல, இந்த அரசின் சாவிக்கொத்தென்பது பஸில் வசமே உள்ளது.
அப்படி இருந்தும் அவருடன் சமரில் ஈடுபட விமலுக்கு எப்படி தைரியம் வந்தது? இது திடீரென மூண்ட போரா அல்லது திட்டமிட்டு தொடுக்கப்பட்ட தாக்குதலா? உக்ரைனை அமெரிக்கா இயக்கியதுபோல, விமலை இயக்கியது யார்?
பஸிலுக்கும், விமலுக்கும் அரசியல் உறவென்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம். 2014 ஆம் ஆண்டுதான் அது ஓரளவு வெளிச்சத்துக்கு வந்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மண்கவ்விய பின்னர், தோல்விக்கு பொறுப்பேற்று அமெரிக்கா பறந்தார் பஸில். அவரால்தான் தோல்வி என்பதை விமல் வெளிப்படையாக அறிவித்து வந்தார். பஸிலின் அரசியல் கதையும் அத்தோடு முடிவுக்கு வரும் என கருதினார்.
‘மஹிந்த சூறாவளி’ எனும் புதிய பயணத்துக்கும் திட்டம் தீட்டினார். விமலுக்கும் ‘உயர்கதிரை’ ஆசை இல்லாமல் இல்லை. எனவே, விமல் எப்படியும் தனக்கு அச்சுறுத்தலாக விளங்குவார், அதாவது உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது தமக்கு அச்சுறுத்தல் என ரஷ்யா கருதியதுபோல, பஸில் உணர ஆரம்பித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார். அதிலும் பஸில் தோல்வி காண்பார் என்றே விமல் கருதினார். வெற்றிநடை போட்டார் பஸில். சற்று பின்வாங்கினார் விமல். எனினும், பஸில் தாக்குதலை நிறுத்தவில்லை.
பொதுத்தேர்தலில் அம்பாறையில் களமிறங்க வேண்டிய சரத் வீரசேகரவை கொழும்பில் களமிறக்கினார். அவருக்காக தனது ஆளணி பலத்தை பயன்படுத்தினார். இதனால் கொழும்பில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பெறும் விமல், இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இது பஸிலின் வேலைதான் என்பது விமலுக்கு தெரியும்.
இந்நிலையில் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வந்தால் தனக்கு மேலும் சிக்கல், நிதி அமைச்சு அவர் வசம் சென்றால் மேலும் நெருக்கடி என்பது விமலுக்கு தெரியும். தனது சகாக்களை இணைத்துக்கொண்டு, இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கும் சரத்து நீக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார். இதற்கு எதிராக பஸிலும் வியூகம் வகுத்தார். இறுதியில் இந்த விடயத்திலும் விமல் அணி தோற்றது. பஸில் நாடாளுமன்றம் வந்தார். நிதி அமைச்சையும் பெற்றார்.
ஐரோப்பிய நாடுகள் தற்போது உக்ரைனுக்கு உதவுவதுபோல, விமலின் சகாக்களும் அவருக்கு உதவினர். அதனால்தான் அவ்வப்போது மோதல்கள் வெடித்தன. எனினும், இது போராக மாறாமல் இருப்பதற்கு மஹிந்த பெரும்பாடு பட்டார். உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுக்கும் என உறுதியாக நம்பிக்கை இருக்கவில்லை. எனினும், அது நடந்தது. அதுபோலவே விமலை அமைச்சரவையில் இருந்து நீக்கமாட்டார்கள் என மொட்டு கட்சியின் நம்பினர். இறுதியில் அதுவும் இனிதே அரங்கேறியது.
விமல் அணியினர், கொழும்பில் நேற்று மாநாட்டை நடத்தி நாட்டை மீட்டெடுக்கும் வழிகாட்டல் ஆவணத்தை முன்வைத்தனர். கோட்டாவின் சுபீட்சத்தின் நோக்கு உள்ளது, பஸிலின் பட்ஜட் உள்ளது, அப்படி இருக்கையில் எதற்காக புதிய திட்டம் என்ற வினா எழுந்தது. மாநாட்டில் உரையாற்றிய விமல், கம்மன்பில போன்றவர்கள் பஸில்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தனர். அதற்கான பதிலடி மொட்டு கட்சி தரப்பில் இன்று கொடுக்கப்பட்டது. இதற்கு மேலும் மௌனம் காத்தால் சிக்கல் என்பதை உணர்ந்த பஸில், விமலையும், கம்மன்பிலவையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இறுதியில் ஜனாதிபதியும் நீக்கினார்.
இது தொடர்பான அறிவித்தல் கடிதம் விமலுக்கு அனுப்பட்ட நிலையில், அதற்கு ‘நன்றி’ என குறிப்பிட்டு, கடிதத்தை முகநூலில் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆக இனிதான் அரசியல் போர் உக்கிரமடையும்.
நாமலை நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டுமானால் மஹிந்தவுக்கு விமல் உள்ளிட்டவர்களின் ஆதரவு அவசியம். மறுபுறத்தில் பஸிலுக்கும் கடிவாளம் போட வேண்டும். ஆக விமலை மஹிந்தகூட இயக்கி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்கா இருக்கின்றது என்ற நம்பிக்கையில்தான் உக்ரைன், ரஷ்யாவை சீண்டியது, அதுபோலவே மஹிந்த இருக்கின்றார் என்ற நம்பிக்கையில்கூட விமல் பஸிலுடன் முட்டிமோதி இருக்கலாம்.
ராஜபக்ச அரசுக்கு தற்போது திரும்பும் திசையெல்லாம் பிரச்சினை. மக்கள் மத்தியில் எதிர்ப்பலையும் உருவாகியுள்ளது. எனவே, சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக பெறவேண்டுமானால் அதனை வேட்டையாடுவதற்கு விமல், கம்மன்பில போன்றவர்களும், தேசியவாத அமைப்பினர்களும் நிச்சயம் தேவை. சிலவேளை, விமல் தரப்பை மொட்டு கட்சி கழற்றிவிட்டால், அது சிங்கள, பௌத்த வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையில் வாசுவின் அமைச்சு பதவி ஏன் பறிக்கப்படவில்லை என் வினா எழலாம். அதன் பின்னணியிலும் பல திட்டங்கள் உள்ளன. நடுநிலை என்ற போர்வையில் வாசுவால் மௌனம் முடியாது. ஏதேனும் ஒரு பக்கம் அவர் நிற்கத்தான் வேண்டும். சிலவேளை, பஸில், கம்மன்பில போன்றவர்களுடன் பேச்சு நடத்துவதாக இருந்தால்கூட அதற்கு வாசு தேவை.
ஆர். சனத்
You must be logged in to post a comment Login