அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ருவிற்றர் பதிவில் வலியுறுத்தியிருந்தார்.
உலகம் முழுவதும் அதிக கேள்வி நிலவுகின்ற இந்த மருந்தை நாட்டுக்கு கொண்டுவருமாறு ஓகஸ்ட் 30 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை கோரியிருந்தார்.
கொரோனாத் தொற்றின் ஆரம்பத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு தௌிவுபடுத்தும்போது, அரசாங்கம் அதனை நகைப்புக்கு உட்படுத்தியது என ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பாணியில் மருந்து தொடர்பான வேண்டுகோளையும் செவிமடுக்காத அரசாங்கம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்று தற்போது அனுமதி வழங்கியிருந்தாலும், மக்களின் வாழ்க்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றால் நாட்டில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்பட்டபோது அரசாங்கம் மூடநம்பிக்கையின் பின்னால் சென்று விஞ்ஞானத்தை மறந்ததன் விளைவாக ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டனவென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a comment