அரசியல்
தமிழரசுக் கட்சியை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர்!
இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தரப்புகளின் ஒற்றுமை பற்றி பல்வேறு மட்டங்களிலும் பேசப்படுகின்றது. ஆனால் அது நடைமுறையில் காணப்படவில்லை. தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய முன்னணி என்பது தோல்வி அடைந்தே வந்தது. ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வியடைந்தது. அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தோல்வியடைந்தது.
தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் ஐக்கிய முன்னணியை உருவாகியது. அதுவும் தோல்வியடைந்தது.
விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தோல்வியே அடைந்தது.
ஐக்கிய முன்னணிகள் உருவாக்கப்படுவதும் அது தோல்வி அடைவதுமே தொடர்ந்து காணப்படுகிறது. தேசிய இனத்திற்கு புறத்தில் இருந்து வருகின்ற ஒடுக்குமுறையை முகம் கொடுப்பதற்கு தேசிய இனத்தில் இருக்கின்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
அதனை தவிர்க்க முடியாது. ஆனால் அதை எல்லாம் ஒரு பொது நோக்கின் அடிப்படையில் இணைக்க வேண்டும். ஐக்கிய முன்னணி இல்லாமல் தேசிய இன பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாது.
பெருந்தேசியவாதத்தை கையாளல் மற்றும் சர்வதேசத்தை கையாளல் போன்ற விடயங்களை செய்ய தமிழ் தரப்பு பலமாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த அரசியல் தேவை. தேசமாக தமிழர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு நிற்பது என்பதை தமிழர்கள் கோட்பாட்டு ரீதியாக ஏற்க வேண்டும். அதன் பின்னர் இதனை எவ்வாறு எங்கள் சூழலில் கொண்டுவர முடியும் என்பதை செயற்பாட்டில் செய்ய வேண்டும்.
அரசியல் நிலைப்பாட்டில் கொள்கை உறுதிப்பாட்டை வைத்திருக்க வேண்டும், சம பங்காளர் என்கின்ற அந்தஸ்து அனைவருக்கும் இருக்க வேண்டும், பிரச்சனைகள் வரும் போது அதனை தீர்க்கக்கூடிய வலுவான பொறிமுறை என்கிற மூன்று அம்சமும் இருக்கும்போது ஐக்கிய முன்னணி சிறப்பாக இயங்க முடியும். இது எதுவுமே எங்களுடைய ஐக்கிய முன்னணிகளில் காணப்படவில்லை.
பெரியண்ணன் பாணியிலேயே இங்குள்ள பலர் நடந்து கொள்கின்றனர். தமிழரசு கட்சி பெரியண்ணன் பாணியை மேற்கொள்ள பார்க்கின்றது. இவை தேர்தல் கூட்டாக இருக்கின்றதே ஒழிய வலுவான அமைப்பு பொறியைக் கொண்ட கொள்கை கூட்டு காணப்படவில்லை. இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர்.
தமிழ் தேசிய பிரச்சினைகளை அரசியல் கட்சிகளிடம் மாத்திரம் கொடுக்க முடியாது. இந்த விவகாரங்களை தீர்ப்பதற்கான அழுத்தங்களை நாம் வெளியில் இருந்து வழங்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு வெளியே பலமான தேசிய தளமொன்றை உருவாக்கி தேசிய பேரியக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் தாயகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல தமிழகம், புலம்பெயர் சக்திகள் உலகில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து மாபெரும் தேசிய இயக்கமாக உருவாக்க வேண்டும்.
அவ்வாறானோர் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்பும் போதே நாம் இந்த தமிழ் தரப்புக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்வை கொண்டு வர முடியும் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login