தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மூன்று கட்சிகளையும் உடைத்து சிதறடிக்கும் வேலைத்திட்டங்களை சிலர் முன்னெடுத்துவருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் இன்று இயங்கிவரும் இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் எந்தவொரு செல்வாக்கும் கிடையாது.
மஹிந்த ஷ இந்த நாட்டில் பத்து வருடத்திற்கு மேலாக ஜனாதிபதியாகயிருந்து இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் கொன்றுகுவித்த கோட்டாபய ராஜபக்ச, இன்று வெளிநாடுகளின் கூட தங்க முடியாத நிலைமையில் உள்ளார்.
ஒரு தேசிய பட்டியல் ஆசனத்துடன் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாகி சர்வகட்சி அரசு அமைப்பதற்காக அறைகூவலையும் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்ததாக கதைகள் கூறப்படுகின்றன. எனினும், ஜனாதிபதி தெரிவு தொடர்பாக ஒன்றுபட்ட நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேரும் செயற்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையொன்று ஏற்படவேண்டும் என்பது அனைவரது அபிலாசையாகும்.
சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் பங்கெடுக்கும் என்று நான் கருதவில்லை.
சர்வகட்சி ஆட்சியொன்று அமையவேண்டும்,எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று அந்த சர்வகட்சி ஊடாக ஏற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று தொடர்பாக தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
#SriLankaNews
Leave a comment