ஹட்டனில் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் கொதிப்படைந்தனர். கடும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஹட்டனில் நேற்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசைகளில் அணிவகுத்து நின்றனர்.
பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மண்ணெண்ணெய் பெறுவதற்கு வரிசையில் நின்றவர்களுக்கு ஆரம்பத்தில் தலா மூன்று லீற்றர் வீதம் வழங்கப்பட்டது. வரிசை நீண்டதால் பின்னர் அது இரண்டு லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டது. மாலையானதும் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் வரிசையில் நின்றவர்கள் கடுப்பாகினர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலையப் பணியாளர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“வேலையை இழந்துவிட்டே வரிசையில் நின்றோம். மண்ணெண்ணெய் இல்லாது எப்படிச் செல்வது? நாளையும் வரிசைக்கு வர வேண்டுமா” என்று மக்கள் சீற்றம் வெளியிட்டனர்.
கூப்பன் முறையை அறிமுகப்படுத்தியாவது, முறையாக மண்ணெண்ணெய் வழங்குமாறும் அவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
#SriLankaNews
Leave a comment