IMG 20211028 WA0406
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா? -சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

Share

வடக்கு-கிழக்கில் இருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா? என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,:

தமிழர்களுக்கு எத்தகைய உரிமைகளையும் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்து அதற்காகவே மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டதாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தெரிவித்ததுடன் இன்றளவும் தொடரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையையும் தோற்றுவித்தார். இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழின விரோதப் போக்கை முதலீடாக வைத்தே ஆட்சி செய்து வந்துள்ளனர். இதன் பெறுபேற்றை இன்று நாடு அனுபவிக்கிறது.

1977ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார். தனது இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும், அரசியல் எதிரியான சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து அகற்றவும் 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கினார்.

உலகத்திலுள்ள அனைத்து ஜனாதிபதிகளையும்விட அதிகபட்ச அதிகாரங்களைத் தாம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்து வந்தார். அந்த அரசியல் சாசனம் இதுவரை இருபதுமுறை திருத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்கள்மீதான பாரிய தாக்குதல்களுக்கும் அவரே காரணகர்த்தாவாக இருந்தார். தமிழ் இளைஞர்களை சுட்டு வீதியில் வீசியதும் அவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பமானது.

தமிழ் தேசிய இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டக் களத்தையும் அதன் அவசியத்தையும் உருவாக்கியதும் அவரே. அதன் பின்னர் இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக, இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழினத்திற்கு எதிராக யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியவரும் அவரே.

தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி, தமிழ் முஸ்லிம் தரப்புகளை மோதவிடக்கூடிய அளவிற்கு மொசாட்டின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுத்தி வந்தது மாத்திரமல்லாமல், யுத்த தளபாடங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியை சேகரிப்பதற்கு மகாவலி திட்டத்தை காரணம் காட்டி பல மில்லியன் பெறுமதியான ஆயுத தளபாடங்களை கொள்முதல் செய்தது மட்டுமன்றி, இதுவரை மகாவலி நீரே செல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி ‘டு’ வலயம் என்பதை உருவாக்கி, அங்கு வசித்துவந்த தமிழ் மக்களை விரட்டியடித்து, மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசத்தை வெலிஓயா என்ற சிங்களப் பெயருக்கு மாற்றியவரும் அவரே.

முப்பது வருடகால நீண்ட யுத்தத்திற்கு அடித்தளமிட்டு, வடக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொய்யான திட்டத்தை முன்மொழிந்து, சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி கடன்களைப் பெற்று, அவர் ஆரம்பித்த யுத்தத்தை அவருக்குப் பின்வந்த அனைத்து ஜனாதிபதிகளும் பின்பற்றினர்.

அனைவருக்கும் ஒரு படி மேலே சென்று மகிந்த ராஜபக்ச தமிழர்களுக்கான உரிமைகளைத் தாம் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதற்குப் பயங்கரவாதம் தடையாக இருப்பதாகவும் கூறி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி அளவு கணக்கின்றி கடன்களையும் நிதியுதவிகளையும் ஆயுதங்களையும் பெற்று, 2009இல் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதற்கும் பலபில்லியன் ரூபா சொத்திழப்பிற்கும் காரணமாக அமைந்தார்.

தற்பொழுது மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் முழுநாடும் திவாலான நிலைக்குச் சென்றது மாத்திரமல்லாமல், மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய மருந்துகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்திருப்பதுடன், அவற்றிற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது.

அவைகளைத் தேடி அலைவதே மக்களின் நாளாந்த வேலையாக அமைந்திருக்கிறது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ராஜபக்ச குடும்பத்தினரையே வீட்டிற்குப் போகும்படி கூறினர். பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் ஜனாபதி அந்த பதவியில் தொடர்ந்தும் இருப்பதுடன் ஏனையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர். ராஜபக்ச தரப்பினர் ஏதோவொரு வகையில் நாடாளுமன்றத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஆனால், திவாலான இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதியினாலோ, அவரது கட்சி சார்ந்த வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களினாலோ முடியாத காரணத்தினால், தேர்தலில் தோற்று, தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கனவு காண்கின்றார்.

ஜனாதிபதியினாலோ, அல்லது அவரது கட்சியினாலோ நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியவில்லை என்றால் ஜனாதிபதிக் கதிரையிலோ அல்லது பாராளுமன்ற கதிரையிலோ அவர்கள் ஒட்டிக்கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இது ஒருபுறமிருக்க, ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பிரதமராக வந்ததன் பின்னர் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில், அறிக்கைகள் விடுவதைத் தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மகிந்த தரப்பினர் தட்டாத அல்லது தட்ட முடியாத கதவுகளைத் தட்டி கடன்களைப் பெறுவதற்கான வல்லமை ரணிலுக்கு இருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட திறமையும் அவரிடமும் இல்லை.

நாட்டை ஒரு தரப்பிடமிருந்து மற்றதரப்பிற்கு அடமானம் வைத்து கடன் பெறுவது மட்டுமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒருவரிடமும் நாட்டை நுகர்வுப் பொருள் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டம் இல்லை. மேலும் இன்றைய ஆட்சியாளர்கள் ஒருவரிடமும் நாட்டுப்பற்றையும் காணமுடியவில்லை.

வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கேட்டபொழுது, அதனை குண்டு வீசி அழித்தீர்கள். அங்கிருந்த ஒரு சில தொழிற்சாலைகளையும் குண்டு வீசி நிர்மூலமாக்கினீர்கள். வடக்கு – கிழக்கில்தான் இந்த கதி என்றால் நீங்கள் காலாதிகாலமாக ஆட்சி செய்யும் தென்பகுதியில் எத்தனை தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறீர்கள்? அங்கும்கூட இன்று பாணுக்கும் பருப்பிற்கும் எரிபொருளுக்கும் எரிவாயுவிற்கும் மக்கள் நாளாந்தம் வரிசையில் நிற்கும் நிலையைத்தானே உருவாக்கியிருக்கிறீர்கள்.

குரங்கிற்குக் கூடு கட்டத் தெரியாது. ஆனால் அதற்கு பறவைகள் கட்டிய கூட்டை சின்னாபின்னமாக்கத் தெரியும். அதைப் போலவே இலங்கையை சீர்படுத்துவதற்குப் பதிலாக அதனைச் சின்னாபின்னப் படுத்தும் வேலையையே எமது ஆட்சியாளர்கள் அனைவரும் செய்துவந்திருக்கிறார்கள். ஆகவே இன்றைய இந்த நிலைக்கு ஜே.ஆரிலிருந்து இன்றுவரை ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தேசிய இனப்பிரச்சினை தீராமல் நாடு அபிவிருத்தி அடையாது என்று கூறியுள்ளார். அதனை வரவேற்பது போன்று பிரதமர் ரணிலும் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டை எதிர்பார்த்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் தமிழர்கள் முன்புபோல் ஏமாறத் தயாரில்லை. இதய சுத்தியுடன் தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கான முன்மொழிவுடன் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்வைக்குமாக இருந்தால் அனைத்து தமிழ் மக்களும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதற்கு தயாராகவே உள்ளனர் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...