20220121 144213 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

போலி பிரச்சாரங்களை ஏற்க முடியாது! – ரெலோ அமைப்பாளர் சுரேந்திரன்

Share

அனைத்து கட்சி பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு தனி நபருக்கோ சொந்தமானது அல்ல. அது தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியினருடைய ஆவணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

அதனை என்னுடைய ஆவணமோ அல்லது எனது கட்சியினுடைய ஆவணம் என போலி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமஸ்டியை நாம் கைவிட்டுவிட்டதாகவும் அதேபோன்று பதின்மூன்றை மாத்திரம் தீர்வாக வலியுறுத்துவதாகவும் தவறான விமர்சனங்கள் தமிழ் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றோம்.

மிகத் தெளிவாக வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் பேசும் மக்கள் எங்களுக்கு தொடர்ந்து அளித்து வந்த ஆணையின் பிரகாரம் சமஸ்டி அடிப்படையிலான சுயநிர்ணயத்தை வலியுறுத்துகின்ற அரசியல் தீர்வை நாங்கள் பெற தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அதையே அரசியல் தீர்வாகவும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களிலும் நாங்கள் சமர்ப்பித்து வந்திருக்கின்றோம். அதில் நாம் உறுதியாகவும் இருக்கின்றோம்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக தமிழர் தரப்பில் எமது கட்சி உட்பட எந்த அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வில் 13ஜ தாண்டி 13 பிளஸ் என்று கூறுகின்றது. 13 தாண்டி பிராந்தியங்களில் கூட்டு என்பது போன்ற பல்வேறு விதமான தீர்வுகளை சர்வதேச சமூகத்திற்கும் இந்தியாவுக்கும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

அதன் அடிப்படையிலேயே இந்திய பிரதமர் உட்பட பலர் 13 மாத்திரமல்ல 13ஜ தாண்டிய அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு பிராந்தியங்களின் கூட்டு, கூட்டாட்சி முறையில் தீர்வு தரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கூறிவந்த 13 தாண்டிய தீர்வை நிறைவேற்றி தமிழ் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் சுயநிர்ணய உரிமையோடு நாட்டில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

ஏன் இந்த கோரிக்கையை தற்போது வலியுறுத்த வேண்டும் என்ற கேள்வி பலரிடம் எழுகின்றது. கடந்த 6 மாதங்களாக தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கக்கூடிய கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டில் ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சியின் விளைவாக தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து 15 விதமான விடயங்களை அடையாளப்படுத்தி அதிலே நான்கு விடயங்களான பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு முதல் இந்த விடயங்களை நல்லிணக்க ரீதியாக நிறைவேற்றுவதன் மூலம் எங்களுடன் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தைகள் அர்த்த புஷ்டியாக இருக்கும் என்று நாம் கருதினோம்.

13ஆம் திருத்தச் சட்டம் அரசியல் தீர்வு அல்ல. ஆனால் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் பல அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூடாக உள்ள மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தேவையற்ற ஒன்று.

ஆகவே ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்த இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதையும் தாண்டி இந்தியா இதனை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படும் போது எங்களுடைய அரசியல் தீர்வை நோக்கி சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப முடியும். இலங்கை அரசாங்கம் இதனை நிறைவேற்ற மாட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே இலங்கை அரசாங்கத்தின் முகத்திரையை கிழிக்க இது ஒரு சந்தர்ப்பமாகவும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் இருக்கும்.

நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் மக்களுக்கு அதிகாரமுள்ள மாகாண சபை அமையும். அதே போன்று நடைமுறைப்படுத்தப்பட்டவிட்டாலும் கூட அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய மிகக்குறைந்த அதிகாரங்களை தரமறுக்கும் இலங்கை ஒருபோதும் அரசியல் தீர்வை தர மாட்டாது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்த காட்டக்கூடிய இருமுனை தந்திரோபாயமாக இருக்கும்.

இதற்கு பெருமளவில் ஊடகங்கள் விமர்சகர்கள் ஆதரவைத் தந்து இருக்கிறார்கள். இதை மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் மக்களிடையே பல சந்திப்புக்களை மேற்கொண்டு இது சம்பந்தமான விளக்கத்தை அளிக்க தயாராகவுள்ளோம்.

தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இயங்குவதற்காக நாங்கள் அனைத்து கட்சியினருக்கும் விடுத்த அழைப்பை ஏற்று பல தமிழ் கட்சி பிரதிநிதிகள் இணைந்து பல கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார்கள் ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வர முடியாதென நிராகரித்திருந்தார்கள்.

இது ஒரு ஆரம்பப் புள்ளியே எதிர் காலத்தில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை அனைத்து கட்சியினருடனும் இணைந்து முன்னெடுக்கவுள்ளோம் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இணைவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தனிப்பட்ட முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு தனி நபருக்கோ சொந்தமானது அல்ல அது தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியினருடைய ஆவணமாகவே பார்க்கப்பட வேண்டும். அதனை என்னுடைய ஆவணமோ அல்லது எனது கட்சியினுடைய ஆவணம் என போலி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...